ஸ்டுடியோ மூவிங் டுர்டில் மற்றும் ஶ்ரீகிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராம் இந்திரா இயக்கத்தில், கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன், அர்ஜூன் தேவ், சரவணன், சாம்பசிவம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மனிதர்கள்”. இரவு நேரத்தில் 6 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துகிறார்கள். போதை தலைக்கேறி ஒருவருக்கொருவர் வாய்த்தகறாரில் ஆரம்பித்து கைகலப்பில் ஒருவர் இறந்துவிடுகிறார். நண்பரில் ஒருவர் மரணமுற்றத்தும் தலைக்கேறிய போதை தடாலென இறங்கியதால் அச்சம் அவர்களை பற்றிக்கொள்கிறது. இறந்தவரின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடலாம் என்று மற்ற ஐவரும் முடிவு செய்கிறார்கள். அவர்களது முடிவு அவர்களை எந்த நிலைக்கு தள்ளுகிறது என்பதுதான் மீதிக்கதை. மனிதர்களின் யதார்த்த மனநிலையை அப்படியே நம் கண்முன்னே திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ராம் இந்திரா. வித்தியாசமான விறுவிறுப்பான கதையோட்டமென்றாலும் படமுழுக்க ஒரே முகம் அதே இரவு என்பதால் பார்வையாளர்களின் பொறுமை சோதிக்கப்படுகிறது. திரைத்துறை வல்லுனர்கள் ரசிக்க வேண்டிய படத்தை, காசு கொடுத்து படம் பார்க்க வந்தவர்களின் மனநிலையை இயக்குநர் மறந்திருப்பது நியாயம் இல்லை. குறும்படமாக தயார்த்திருக்க வேண்டிய கதையை நீண்ட படமாக திரையில் ஓடவிட்டிருக்கிறார். இருப்பினும் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜும் இசையமைப்பாளர் அனிலேஷ் மேத்யூவும் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். நிலா வெளிச்சத்திலும் கார் வெளிச்சத்தில் மட்டுமே படம்பிடித்திருப்பது புதிய முயற்சிதான். அருமையாக இருந்தது. பின்னணி இசையும் பிரமாதம். போதையின் உச்சத்தையும் பயயத்தின் உச்சத்தையும் மிகத்துள்ளியமாக முகத்தில் காட்டி நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன், அர்ஜூன் தேவ், சரவணன், சாம்பசிவம் ஆகியோர் அறிமுக நடிகர்கள் என்ற அடையாளமே தெரியாமல், அனுபவம் பெற்ற நடிகர்களாக காட்சியளிப்பது வியக்க வைக்கிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுகளை சிறிதும் பிசகாமல் அப்படியே திரையில் வடித்திருக்கிறார்கள். நடிகர்கள் அனைவரும் பாராட்டபட வேண்டியவர்கள். இயக்குநர் ராம் இந்திராவின் முயற்சி பாராட்டத்தக்கது.
“மனிதர்கள்” திரைப்பட விமர்சனம்
