மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் இயக்குநர் கே முரளி தெரிவித்துள்ளார்.  சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், பத்தாவது,  பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு  பயிற்சி வகுப்புகள் தனித்தனியாக நடைபெறும் என்றும் இவற்றில் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம் என்றும் கூறினார். கடந்த  ஆண்டு பயிற்சி முடித்தவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.  பிற மாநிலங்களிலிலிருந்து இங்கு வந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அவர்களின் மாநிலங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக  முரளி குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் 250 முதல் 300 பேர் வரை இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுவதாக கூறிய அவர், தற்போதைய தேவை 10 மடங்கு அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்றார்.

திண்டிவனம் உளுந்தூர்பேட்டை ஜெயங்கொண்டம் புதுக்கோட்டை கரூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தோல் அல்லாத காலணிகள் தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன என்றும் நைக், பூமா, அடிடாஸ்,  மற்றும் ஸ்கெச்சர்ஸ் போன்ற உலகளாவிய பிராண்டுகள் தென்னிந்தியாவில் உற்பத்தி அலகுகளை அமைப்பதால், தமிழ்நாட்டிற்கு மட்டும் 2025-26 & 2026-27 நிதியாண்டில் காலணித் துறையில் சுமார் 1,35,000 திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் திரு முரளி தெரிவித்தார்.