“கிஸ்” திரைப்பட விமர்சனம்

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின், பிரீத்தி அஸ்ராணி, பிரபு, விடிவி கணேஷ், ஆர் ஜே விஜய், ராவ் ரமேஷ், தேவயானி, சக்தி ராஜ், கௌசல்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கிஸ்”. கதாநாயகி பிரீத்தி அஸ்ராணி முலம் கதாநாயகன் கவினுக்கு ஒரு மாயப்புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகதை கவின் படித்ததும் ஒரு அபூர்வு சக்தி கவினுக்கு கிடைக்கிறது. காதலர்கள் முத்தமிடுவதை கவின் பார்த்துவிட்டால் அந்த காதலர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை கவினுக்கு முன்கூட்டியே தெரிகிறது. இப்படியொரு அபூர்வ சக்தி படைத்த புத்தகம் கிடைக்க காரணமாயிருந்த பிரீத்தி அஸ்ராணியை கவின் நேரில் பார்க்கிறார். பார்த்ததும் கவின் அவள் மீது காதல் கொள்கிறார். பிரீத்தியும் கவின் மீது காதல் கொள்கிறாள். ஒருகட்டத்தில் பிரீத்தி கவினுக்கு முத்தம் கொடுக்கிறாள். முத்தம் கொடுத்ததும் பிரீத்தியின் எதிர்காலம் கவினுக்கு தெரிய வருகிறது. அதைப்பார்த்ததும் கவின் பதறுகிறார், கலங்குகிறார். பிரித்தியின் எதிர்காலம் என்ன? அந்த எதிர்கால நிகழ்விலிருந்து பிரீத்தியை கவின் காப்பாற்றினாரா? அந்த மாயப்புத்தகத்திற்கும் பிரீத்திக்கும் கவினுக்குமுள்ள தொடர்பு என்ன? என்பதுதான் கதை. நடன இயக்குநராக தனது திறமையை நிரூபித்த சதீஷ் கிருஷ்ணன் கதை சொல்வதிலும், அதனை இயக்குவதிலும் எமக்கு திறமை உண்டு என்பதை நிரூபிப்பதற்காக ‘கிஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். கதையாக கேட்கும் போது அழகாகவும், கிளர்ச்சியூட்ட கூடியதாகவும், இளமை ததும்பக்கூடியதாகவும் இருக்கிறது. ஆனால் அதை  காட்சிப்படுத்தியதில் போதாமைகளும், இல்லாமைகளும் இருப்பதால் சுவராசியம் குறைகிறது. ஆனால் வி டிவி கணேஷ் – ஆர் ஜே விஜய் ஆகிய இருவரின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலை அளிக்கிறது. இரண்டாம் பாதியில் இடம்பெறும் கவின் – பிரீத்தி இடையேயான காதல் காட்சிகள் வழக்கமானதாக இருந்தாலும்… இவர்களின் காதல் ரசிகர்களை சென்றடையவில்லை என்றே சொல்லலாம். கவின் தன் கதாபாத்திரத்தை தோளில் சுமக்கும் போது அதன் துல்லியமான உணர்வு ரீதியிலான வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதில் தவறவில்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.  நடிகை ப்ரீத்தி அஸ்ராணி அழகாக இருக்கிறார். இளமையாக இருக்கிறார். நன்றாக நடனமாடுகிறார். மார்க்கஸ் – டெய்ஸி தம்பதியினராக நடித்திருக்கும் ராவ் ரமேஷ் மற்றும் தேவயானியின் நடிப்பிலும் அனுபவம் பளிச்சிடுகிறது. ஒளிப்பதிவாளரின் உழைப்பை  பாராட்டாமல் இருக்கமுடியாது. அவரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது. வசனங்கள் ஆங்காங்கே கைத்தட்ட வைக்கிறது. சலிப்புத்தட்டாமல் இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு வரலாம்.