மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசிகையில் கூறியதாவது: “நவீன் சார், ரவி சாருக்கு நன்றி. உலகம் முழுவதும் இந்தப் படம் வெற்றியடைந்துள்ளது. அங்கெல்லாம் கொண்டு சேர்த்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நிகேத், எடிட்டர் பரத், காஸ்ட்யூமர் பூர்ணிமா என அனைவருக்கும் நன்றி. ஐஸ்வர்யா, ரிது, ரோகிணி மேம், சரத் சாருக்கு நன்றி. நிறைய சீன்களில் மமிதாவின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. நிறைய விவாதங்களை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா, ஆந்திரா, துயாய், நார்த் அமெரிக்கா, நம் தமிழ் மக்கள் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி”.******
இயக்குநர் கீர்த்தீஸ்வரன், “எனக்கு முதல் வெற்றி மேடை என்பதால் இது ரொம்பவே ஸ்பெஷலான மேடை. இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி சார், நவீன் சாரின் ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்கு இணை அவர்கள்தான். அனில் சாரின் ஆதரவுக்கும் நன்றி. மூன்று படம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்கிறார் பிரதீப். அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். சில விஷயங்கள் தைரியமாக வசனமாக வைப்பதற்கு பிரதீப் உறுதுணையாக இருந்தார். கிளைமாக்ஸில் வரும் ஆணவக்கொலை தொடர்பான வசனம், கவின் ஆணவக்கொலை சமயத்தில் ஏற்படுத்திய பாதிப்பால்தான் வைத்தோம். மமிதாவிடம் ஒரு சீன் பாதி சொல்லும்போதே உடனடியாக பிடித்துக் கொள்வார். சின்ன வயதில் இருந்தே சரத் சாரைப் பிடிக்கும். அவருடைய நகைச்சுவை காட்சிகளையும் விரும்பி பார்த்திருக்கிறேன். ரோகிணி மேம் இந்த அம்மா கதாபாத்திரத்தில் ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஒரு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்ததெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டும்தான் உள்ளது. வேறு யாருக்கும் இல்லை என்பதைத்தான் ‘டியூட்’ பேசுகிறது. அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் இது. எனக்கான நல்ல அறிமுகத்தை இந்தப் படம் மூலம் கொடுத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி”.
தயாரிப்பாளர்கள் ரவி, நவீன், “‘டியூட்’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கீர்த்தீஸ்வரன் ரொம்ப சென்சிபிளான விஷயத்தை சரியாக சொல்லியுள்ளார். பிரதீப், மமிதா மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.