(தங்க முகையதீன்)
nஆகாஷ் பாஸ்கரன், தனுஷ் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், பார்த்திபன், சமுத்திரகனி, இளவரசு, நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இட்லி கடை”. தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் மண் சுவரில் ஓலை மேய்த ஒரு குடிசையில் இட்லி கடை வைத்து நடத்துகிறார். நவீன கருவிகளை பயன்படுத்தாமல் ஆட்டுரலில் கையால் மாவறைது இட்லி பதத்திற்கு பக்குவமாக மாவை அரைத்தெடுத்து விறகு அடுப்பில் இட்லி அவித்து விற்பனை செய்து வருகிறார். தனுஷ் சிறுவயது முதல் தந்தை ராஜ்கிரணுடன் இட்லிக் கடைக்கு சென்று அவரின் கைப்பக்குவத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். வருமானம் குறைவாக இருப்பதால் தனுஷ் தாய்லாந்து நாட்டுக்கு சென்று சத்தியராஜுக்கு சொந்தமான 7 நடசத்க்திர விடுதியில் வேலை பார்க்கிறார். தனுஷின் நன்நடத்தையின் காரணமாக சத்தியராஜின் மகள் ஷாலினி பாண்டே தனுஷை காதலிக்கிறார். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க சத்யராஜ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கும்போது தனுஷின் தந்தை ராஜ்கிரண் மரணமடைந்துவிட்டதாக தகவல் வருகிறது. ஈமக் காரியங்களை முடித்துவிட்டு திருமணத்துக்கு வந்துவிடுமாறு தனுஷையும் அவருக்கு துணையாக இளவரசையும் சத்க்யராஜ் அனுப்பி வைக்கிறார். ஈமக்காரியங்கள் அனைத்தும் முடிந்ததும் தாய்லாந்துக்கு செல்ல மறுக்கிறார் தனுஷ். எதற்காக மறுக்கிறார்?. சத்யராஜ் மகள் ஷாலினி பாண்டே தனுஷின் திருமணம் என்னானது?. என்பதே கதை. கிராமத்து வாழ்க்கைக்கும் நகரத்து வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக பிரித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் தனுஷ். தனது வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவத்தோடு கொஞ்சம் கறபனையும் கலந்து ஒரு காவியத்தை திரைக்கதையாக்கியிருக்கிறார். பூக்கடைக்கு முகவரி தேவையில்லை என்பதை தனது நடிப்பால் நிரூபித்திருக்கிறார் ராஜ்கிரண். நித்யா மேனன் கனத்துடன் தூக்கலாக நடித்துள்ளார். சத்யராஜ் நியாயதின் பக்கம் நின்று பேசுவது அனைவரையும் கவர்கிறது. அருண் விஜய் வில்லத்தனத்தில் இறக்கைகட்டி பறக்கிறார். பார்த்தீபனின் நையாண்டி பேச்சு ரசிக்க வைக்கிறது. வில்லத்தனத்தில் கமுக்கமாக காரியமாற்றி தோல்வியில் முகம் தொங்கும் காட்சியில் சமுத்திரகனி மிஞ்சியிருக்கிறார். படமுழுக்க பழமையின் சிறப்பைப்பற்றியே பேசுகிறது. பழமையின் பரிணாம வளர்ச்சிதான் புதுமை என்றாலும், பழைய சோறும் வெஞ்சனத்தின் ருசியும் பீட்சாவும் பர்க்கரும் கொடுப்பதில்லை. புளித்த மாவில் அவித்த இட்லி சுவைக்கிறது.