ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது: “சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளை ரொம்பவே ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகிறது ? அமெரிக்காவில் என்னுடைய மகள் தற்போது ஏஐ தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் என்னிடம் மனித குலத்திற்கே எதிரான ஒரு விஷயத்தைத் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எல்லோர் கையிலும் கத்தி இருக்கும். அவனுக்கான நீதியை அவனே தேடிக் கொள்ளும் சூழலுக்கு நாடு தள்ளப்படும். இந்த படத்தில் அதைத்தான் சொல்கிறார்கள். இங்கு யாரும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவதில்லை. கொஞ்சம் பிரபலம் ஆகும்போது தயாரிப்பாளர்களை அச்சுருத்தி உயர்வான ஊதியத்தை பெறுகிற சூழல் தான் இங்கே இருக்கிறது” ******
கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 2500 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இதில் 2100 பேர் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை வருடங்களில் அப்படி முதல் படம் எடுத்த 2000 பேர் அப்படியே போய் விட்டார்கள். வெறும் 400 பேர் தான் மீண்டும் படம் எடுக்கத் திரும்பி வருகிறார்கள். ஒரு மரம் நட்டால் வளர்ந்து பிறகு பல வகைகளில் பலன் தரும்.. எதுவுமே இல்லை என்றாலும் நிழல் தரும் வேலையையாவது செய்யும். இசையமைப்பாளர்களுக்கு கூட அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் குடும்பத்திற்கும் செல்லும் விதமாக ராயல்டி பணம் வந்து கொண்டிருக்கும்.. ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை அப்படி அல்ல.. நன்றாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் ஐந்து அல்லது பத்து சதவீதம் தொகையைத் தங்களை ஆளாக்கிய தயாரிப்பாளர்களுக்குத் தர வேண்டும் என ஒரு சிஸ்டம் கொண்டு வந்தால் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் நன்றாக இருப்பார்கள்.
இன்றைய சூழலில் வெட்கம், மானம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு வள்ளுவர் சொன்னதைப்போல இன்னா செய்தவருக்கு இனியவை செய்ய முடியாது. திருப்பி இன்னா தான் செய்ய முடியும். மற்ற பல நாடுகளுக்குச் செல்லும்போது எல்லா பொது மக்களையும் ராஜா போல நடத்துவார்கள். குற்றவாளிகளை கிரிமினல்களாக நடத்துவார்கள். ஆனால் இங்கே சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருக்கிறது. ஆனால் குற்றவாளி வந்தால் அவனை ராஜா போல பார்க்கிறார்கள். நம்முடைய சிஸ்டம் அப்படி இருக்கிறது. நான் ஒரு படத்திற்காக சிறைச்சாலை சென்று கைதிகளை சந்தித்தபோது, ஒரு கொலைக் கைதியிடம் திட்டமிட்டுக் கொலை செய்தாயா? என்று கேட்டேன். அதற்கு அவன் திட்டமிட்டு கொலை செய்தால் அவர்கள் வெளியே இருக்கலாம் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்கள் தான் இங்கே உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொன்னார். அதைத்தான் இந்த படத்தில் அழகான கருவாக எடுத்து இருக்கிறார்கள்.
இயக்குநர் சங்கர் சாரதி பேசும்போது*, “கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்” என்கிற இந்த திருக்குறளை மையப்படுத்தி தான் கமர்சியல் கிரைம் த்ரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறேன். அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள். மக்களைப் பாதுகாக்க யாரிடம் இந்த சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள் தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ? இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வலியையும், வேதனையையும் தான் வள்ளுவன் படமாக உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தில் பலரும் சந்தித்த வலிகளைத் தான் ஸ்கிரிப்ட் ஆக மாற்றி இருக்கிறேன். “இந்த கதை நடிகர் பரத்திற்காகவே உருவாக்கப்பட்டது. அவரிடம் சென்று கூறினேன். கதை பிடித்திருந்தாலும் அப்போது அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தேதி கிடைக்கவில்லை. இப்போது இந்த படத்தை பாராட்ட அவரே மேடையில் வந்து இருப்பது அமர்ந்திருப்பதை கடவுள் செயல் என்றே நினைக்கிறேன்” என்று பேசினார்.
*வள்ளுவன் படத்தின் தயாரிப்பாளர் ஷைல் குமார் பேசும்போது,* “நான் இந்த படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்தது என்னுடைய தாய் தந்தை தான். அதேபோல நான் வெளிநாட்டில் இருந்தாலும் கூட படத்தின் வேலைகள் தடைபடாமல் இங்கிருந்து என்னுடைய நண்பரான பாஸ்கரன் பார்த்துக் கொண்டார். அவர்களுக்கு நன்றி” என்று கூறினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

