அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்சியில், விக்ரம் பிரபு பேசியதாவது:, ” இந்தப் படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. இப்படம் வெளியான பிறகு திரையரங்கத்திற்கு சென்று ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பு இப் படக்குழு மூலம் கிடைத்தது. நீண்ட நாள் கழித்து மதுரைக்கு சென்றிருந்தேன். பொதுவாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு என்னுடைய பணி நிறைவடைந்தது என்று மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் இந்த படம் வெளியான பிறகு சென்னை மற்றும் மதுரை உள்ள திரையரங்கத்திற்கு சென்று ரசிகர்களை சந்தித்தபோது அவர்களின் அன்பு என்னை வியக்க வைத்தது. சென்னையில் நாங்கள் குழுவாக திரையரங்கத்திற்கு சென்ற போது மிகப்பெரும் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை அவர்கள் எந்த அளவிற்கு அனுபவித்து ரசித்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ரசிகர்கள் இந்தப் படக் குழு மீது காட்டிய அன்பிற்கும் இந்த படத்தின் மீது ஊடகத்தினர் காட்டிய அன்பிற்கும் நன்றி.*******
நான் ஷான் ரோல்டனின் ரசிகன். இந்தப் படத்திற்கு அவருடைய இசை ஆன்மாவாக இருந்தது. இந்த படத்தின் மூலம் நல்லதொரு ஆல்பத்தை கொடுத்து இருக்கிறீர்கள். இந்தப் படத்திற்கு ஹீரோயின்ஸ் இருவரும் இரண்டு பில்லர்கள். அற்புதமாக நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு அப்பா சண்டைக் காட்சிகள் நன்றாக நடித்திருக்கிறாய் என பாராட்டினார். இதுவே எனக்கு மிகப்பெரிய விசயம். இந்தத் திரைப்படத்தை திரையுலகினர் பலரும் பார்த்து ரசித்து விட்டு என்னை பாராட்டினார்கள். இந்த படத்தின் மூலம் ஏராளமானவர்களின் அன்பை சம்பாதித்து இருக்கிறேன். இறுகப்பற்று’ படத்தை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததாக இயக்குநர் சொன்னார். அதற்காக அவருக்கும் நன்றி. எனக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நிரூபித்த பிறகு தான் அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஏனெனில் டைப் காஸ்ட் என்ற பிரச்சனையில் சிக்கியிருக்கும் நடிகர்களில் நானும் ஒருவர். அதையெல்லாம் உடைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடன் இணைந்து வெளியான அனைத்து திரைப்படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஏனெனில் இது என்னுடைய துறை. சேர்ந்து ஓடினால் நன்றாக இருக்கும். ” என்றார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி படமாக்கிய ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் நன்றி. இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நண்பன் சண்முக பிரியன் முதல் முதலாக ‘லவ் மேரேஜ் ‘ படத்தை இயக்குகிறார். அந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். இதற்காக படத்தின் பட்ஜெட்டை விட கூடுதலாக செலவழித்தார்கள். பஸ், ரயில், பஸ் ஸ்டாண்ட் என இந்த படத்தை எங்கெங்கு விளம்பரப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் விளம்பரப்படுத்தி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தனர். சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கடினம் என்ற சூழலில் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலனின் ஆதரவு இருந்ததால் இந்த திரைப்படம் நிறைய திரையரங்குகளில் திரையிட முடிந்தது. இந்தத் திரைப்படத்தை அவர்களால் எந்த அளவிற்கு பெரிய அளவில் திரையரங்குகளில் திரையிடப்பட முடியுமோ.. அந்த அளவிற்கு வெளியிட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் இயக்குநர் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் இயக்குநர் சண்முக பிரியனுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் சண்முக பிரியனின் வெற்றியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் அவர் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.
இயக்குநர் சண்முக பிரியன் பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி படமாக்கிய ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் காட்சி திரையிட்ட பிறகு உங்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துகளும், அன்பும்.. எனக்கு குழந்தை பிறந்த போது கிடைத்த சந்தோஷத்தை விட அதிகம். முதல் படமாக குடும்ப படத்தை இயக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். அக்காவை கல்யாணம் செய்து கொள்வதற்காக வரும் ஒருவர் தங்கச்சியை திருமணம் செய்து கொள்கிறார். இதை கேட்கும் போது கொஞ்சம் கொச்சையாக இருக்கும். பெண்களை எப்போதும் அழகாக தான் காட்சிப்படுத்த வேண்டும் என என்னுடைய இயக்குநர் ரா. கார்த்திக் சொல்லிக்கொண்டே இருப்பார். இந்தக் கதையில் பெண்ணை இன்னும் அழகாக காட்சிப்படுத்தலாம் என்று அவர்தான் சொன்னார். அதற்குப் பிறகுதான் இப்படத்தின் திரைக்கதை முழுமையானது. இந்த கதையை எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்ட என் ஹீரோ விக்ரம் பிரபுவிற்கு முதல் நன்றி. படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன் கொடுத்த ஆதரவு எல்லையற்றது. அவருக்கும் என் நன்றி. நான் எதிர்பார்த்ததை விட கூடுதலான திரையரங்குகளில் வெளியிட்டதற்காக விநியோகதஸ்தர் சக்திவேலனுக்கும் நன்றி. படத்தின் பணிகள் நடைபெறும் போது தயாரிப்பாளரும், தொழில்நுட்பக் கலைஞர்களும், நான் எதிர்பார்த்ததை விட கூடுதலான ஒத்துழைப்பை வழங்கினர். படம் வெளியான பிறகு ஊடகத்தினரும், ரசிகர்களும் பேராதரவு அளித்து வருகிறார்கள். இதை பார்க்கும் போது எனக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்காக நான் இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்காக நடிகை சுஷ்மிதாவிடம் பேசும்போது படத்தின் முதல் பாதியில் நீங்கள்தான் ஹீரோயின். அதன் பிறகு படத்தினை விளம்பரப்படுத்தும் போதும் உங்களுடைய பங்களிப்பு தேவை என்று சொன்னேன். அதன் பிறகு மீனாட்சியிடம் பேசும்போது நீங்கள் இரண்டாம் பாதியில் இருப்பீர்கள். படத்தினை விளம்பரப்படுத்தும் போது நீங்கள் இடம் பெற மாட்டீர்கள் என்று சொன்னேன். முதலில் தயக்கம் காட்டினார்கள். அதன் பிறகு என் மீது நம்பிக்கை வைத்து நடித்தார்கள். அதற்காக இருவருக்கும் நன்றி. இந்தப் படத்தை நடிகர் பிரபு பார்த்துவிட்டு, விக்ரமை நன்றாக நடிக்க வைத்திருக்கிறாய் என்று பாராட்டினார். இது எனக்கு கிடைத்த சிறந்த பாராட்டாகவே கருதுகிறேன். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் நண்பன் யுவராஜுக்கும் நன்றி ” என்றார்.