“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்பட விமர்சனம்

பிசிலியான் நசரேத் தயாரிப்பில் அபிஷன் ஜீவித் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர். ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமாரவேல், ஶ்ரீஜா ரவி, யோகலட்சுமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. இலங்கையில் போருளாதார சிக்கலால் தவித்த சசிகுமார் தனது மனைவி சிம்ரன் மகன்கள் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன் ஆகிய நால்வருடன்  கள்ளத்தோணியில் ராமேஸ்வரம் வருகிறார். அவர்களை அகதிகளாக காவல்த்துறையினர் பிடிக்கிறார்கள். அதற்கு நாங்கள் அகதிகள் இல்லை. முகாமிற்கு அனுப்பாதீர்கள். சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு செல்கிறோம் என்கிறார்கள். அவர்கள் மீது இரக்கம் ஏற்பட்டு காவலர்கள் அவர்களை சென்னைக்கு அனுப்பி விடுகிறார்கள். சென்னையிலிருக்கும் சிம்ரனின் அண்ணன் யோகிபாபின் உதவியால் போலியான ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை தயாரித்து  தமிழ் நாட்டை சேர்ந்தவர்களென கூறி காவல்த்துறை ஆய்வாளர் பக்சின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.பாஸ்கரனின் காரோட்டியாக சசிகுமார் வேலை பார்க்கிறார். சசிகுமார் ராமேஸ்வரம் வந்து சென்னைக்கு சென்ற அதே நாளில் ராமேஸ்வரத்தில் குண்டு வெடிக்கிறது. அதனால் சந்தேகப்பட்ட காவல்த்துறையினர்  சசிகுமாரை தேடி சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் சசிகுமாரை கண்டுபிடித்தார்களா?. என்பதுதான் கதை. மனைவிக்கு கணவன் பிள்ளைகளுக்கு தந்தை என்ற இலக்கணத்தோடு சசிகுமார் இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். நகைச்சுவை காட்சிகளால் அடம் முழுவதும் நிறைந்திருக்கிறது. சிம்ரனின் இயல்பான நடிப்பை காணமுடிகிறது. இலங்கைத்தமிழில் அவரின் கிளிப்பேச்சு ரசிக்க வைக்கிறது. மகன்களாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன் ஆகிய இருவரும் நகைச்சுவை காட்சிகளில் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இளைய மகனாக நடித்திருக்கும் கமலேஷ் ஜெகனின் துள்ளல் ஆட்டம் ஆடி பார்வையாளர்களை அசர வைத்துவிட்டார். படத்துக்கு மிகவும் பக்கபலமாக இருப்பது ஷான் ரோல்டனின் இசையும் நடன்மும்தான். கதையில் சட்ட மீறல்கள் இருந்தாலும், மனித நேயத்திற்கு முன் சட்டம் செல்லாக் காசுதான் என்று இயக்குநர் இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். மனிதகுலத்தில் யாரும் அனாதைகளும் இல்லை அகதிகளும் இல்லை. அனைவரும் சமம் என்ற தத்துவ கோட்பாடை திரையில் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் புதுமுக இயக்குநர் அபிஷன் ஜீவித் பாராட்டுதலுக்குறியவர்.