மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பில் தொன்மை
மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ள விக்டோரியா பொது அரங்கத்தினை மேயர் ஆர்.பிரியா (09.12.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விக்டோரியா பொது அரங்கம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தின் பேரரசி விக்டோரியாவின் பெயரால் பெயரிடப்பட்ட சிறப்பு வாய்ந்த கட்டடமாகும். மேலும், சென்னை மாநகரின் கட்டடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், விக்டோரியா ராணி ஆட்சியின் பொன் விழாவை நினைவு கூறும் வகையிலும் அமைக்கப்பட்ட இக்கட்டடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ராபர்ட் சிசோல்ம்
என்பவரால் இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையில் நம்பெருமாள் செட்டியாரால் 1888ஆம் ஆண்டு இந்த அரங்கம் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க, தொன்மை வாய்ந்த விக்டோரியா பொது அரங்கினை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியினை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்தார். அதனடிப்படையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மாநகராட்சி சார்பில் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இரண்டு தளம் கொண்ட இக்கட்டடத்தின் நீளம் 48 மீட்டர், அகலம் 24 மீட்டர், பிரதானக் கூரையின் உயரம் 19 மீட்டர் மற்றும் மொத்த கோபுரத்தின் உயரம் 34 மீட்டர் ஆகும். தற்பொழுது இந்த விக்டோரியா பொது அரங்கின் முழுக் கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள், முழு கூரையினையும் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், வெளிப்புறம் மற்றும் உட்புறம் மரத்தளம் மற்றும் மரப்படிக்கட்டுகளுடன் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், ஏற்கனவே உள்ள கட்டடத்தை தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல் உள்ளிட்ட மறுசீரமைப்புப் பணிகள் முடிவு பெற்றுள்ளது. இப்பணிகள் மற்றும் விக்டோரியா பொது அரங்கத்தின் வெளிப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பூங்கா மற்றும் இதர பணிகளையும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் அனைத்தும் தொன்மை மாறாமல்முடித்திடவும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில் பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.