5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாபெரும் மெரினா கடற்கரை தீவிர தூய்மைப் பணியினை மேயர் ஆர் பிரியா தொடங்கி வைத்தார்.

இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் மெரினா கடற்கரையில் இன்று (22.02.2025) நடைபெற்ற "நம்ம சென்னை – நம்ம பொறுப்பு நம்ம மெரினா, நம்ம பெருமை" என்ற உணர்வுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாபெரும் மெரினா கடற்கரை தீவிர தூய்மைப் பணியினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக, மேயர் தலைமையில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சென்னை மாநகரைத் தூய்மையாக வைப்பது குறித்த உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். பின்னர், மேயர் கடற்கரையை தூய்மையாக வைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், சென்னை மாநகரை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கவும் பொதுமக்கள் தங்களது பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வினை ஏற்படுத்தி, பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளை அகற்றினார்கள். மேலும், தூய்மைப் பணியில் பங்கேற்ற அனைவரும், தாங்கள் அகற்றிய குப்பைகளை காண்பித்து புகைப்படம் எடுத்து, நம்ம மெரினா நம்ம பெருமை நம்ம சென்னை நம்ம பொறுப்பு என்பதைக் குறிப்பிட்டு @chennaicorp அதிகாரப்பூர்வ X தளத்தை டேக் செய்து பதிவிட்டு, #CleanMarina #NammaChennaiNammaPoruppu போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும் தங்கள்
நண்பர்களையும் ஊக்குவிக்க வேண்டும். இதனை தனி ஒருவரின் செயலாக தொடங்கி, சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த முயற்சியாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். தூய்மையான, பசுமையான சென்னையை உருவாக்க, இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் கே. ஜெ. பிரவீன் குமார், இ.ஆ.ப., கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் கே. சுடர்கொடி, மாநில நாட்டு நலப்பணித் திட்டக் குழும அலுவலர் டாக்டர் பி.என். குணாநிதி, மண்டல அலுவலர் பி.எஸ்.சீனிவாசன், செயற்பொறியாளர்கள் எம்.முத்தையா, சதீஷ், மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.