ஆகஸ்ட் -9 உழைக்கும் மக்களின் உரிமைப்போர் சிஐடியு வெற்றிகரமாக்க முடிவு

இந்திய  தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 16.07.2021 அன்று மாநில தலைவர் அ.சவுந்திரராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் தோழர்.டாக்டர் ஹேமலதா அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் துணை பொதுச்செயலாளர்கள் வி.குமார், எஸ்.கண்ணன், கே.திருச்செல்வன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சிஐடியு அகில இந்திய விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொழிலாளர் சட்டத்தொகுப்புக்களை திரும்பபெறு! மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்! மின்சார திருத்த மசோதாவை வாபஸ் வாங்கு! நூறுநாள் வேலை திட்டத்தை அதிகப்படுத்து! உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 9 அன்று நடைபெறவுள்ள இயக்கத்தை சக்தியாக வெற்றிபெறச் செய்வதெனவும், இப்போராட்டத்திற்கு முன்பாக லட்சக்கணக்கானோரை  துண்டறிக்கையுடன் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது, மேலும், கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்
தமிழ்நாடு கட்டுமான நல வாரிய கூட்டத்தில் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலுவையிலுள்ள உதவி தொகைகளுக்கு அரசாணை வெளியிட்டு அமலாக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும். தோட்டத்தொழில், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் கேரள மாநிலத்தில் உள்ளதுபோல் தனிவாரியம் அமைத்திட வேண்டும். கொரோனா பெருந்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சையின் போது மரணமடையும் அரசு மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கான மருத்துவ சான்றிதழில் கொரோனா மரணம் குறிப்பிட்டு வழங்கப்படுவதில்லை இதனால் இறப்புக்கால நிவாரணம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது தொற்று பாதிப்பு அறிகுறி தெரிந்தவுடன் RTPCR  பரிசோதனை முடிவையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சான்றையும் அடிப்படையாக கொண்டு கொரோனா மரணம் என்று சான்றிதழ் வழங்கவேண்டும்.
தமிழகத்தில் சுமை ஏற்றி இறக்கும் தொழிலில் சுமார் 3லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர், இவர்களுக்கென தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும், கட்டுமானம் மற்றும் இதர முறைசாரா நலவாரியங்களில் வழங்கப்படும் பணப்பயன் தொகைகளை இரட்டிப்பாக உயர்த்தி வழங்கவும். தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவேண்டும். மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தேசீய மீனவர் கொள்கை/2021ஐ ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும், மாட்டுவண்டி தொழிலாளர் வாழ்வாதார பாதுகாக்க வகையில் மணல் குவாரிகள் திரக்கப்பட வேண்டும், முந்திரி தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க கேரளா மாநிலம் போல் முந்திரி கழகம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி, தேனி, சிவகங்ககை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சுமார் 600 முந்திரி ஆலைகளில் சுமார் இரண்டு லட்சம் முந்திரி ஆலை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள், மேலும், வீடுகளில் வைத்தும் சுமார் ஒருலட்சம் முந்திரி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் இத்தொழில் ஒரு பாரம்பரிய தொழில் ஆகும், இத்தொழில் சமீப பல ஆண்டுகளாக மத்திய / மாநில அரசுகளின் கொள்கைகள் இத்தொழிலை அழிவு பாதையில் கொண்டு செல்கிறது, இதன் காரணமாக சுமார் மூன்று லட்சம் முந்திரி தொழிலளர்களின் வேலை கேள்விக்குறியாகி வருகிறது, மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் வருவாயை ஈட்டிக்கொடுக்கும் இத்தொழிலையும், தொழிலாளிகளையும் பாதுகாக்க முந்திரி கழகம் ஒன்றினை கேரளா அரசை போன்று அமைக்க தமிழகத்தில் உறுவாக்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.