ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல்

-தங்க முகையதீன்-

—————-

சைபர் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இக்குற்றங்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும் பொதுமக்கள், விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென தாம்பரம் காவல்த்துறை ஆணையாளர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: சைபர் குற்றங்கங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காவல் துறையை அணுகியவண்ணம் உள்ளனர். பொதுவாக பங்குச்சந்தை தொடர்பான சைபர் குற்றங்கள் பகுதி நேர வேலைவாய்ப்பு தொடர்பான சைபர் குற்றங்கள் படித்தவர்களையும், வசதி படைத்தவர்களையும் குறி வைத்து அரங்கேற்றப்படுகிறது. இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் தங்களின் அடையாளங்களை மறைத்துக்கொண்டு, பிரபல தொழில் நிறுவனங்களின் முகவர்களாகவும், அதிகாரிகளாகவும், நிறுவனர்களாகவும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரபல பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொடர்புடைய நபர்களின் புகைபடத்தை தங்களுடைய முகப்பு படமாக வைத்து முகநூல், படவரி, புலனம்  போன்ற சமுக வலைத்தளங்களில் பொதுமக்களை கவரும் விதத்தில் பேசுகிறார்கள். இதைப்பார்ப்பவர்கள் நம்பிக்கை கொண்டு, அவ்வாறான நபர்கள் அனுப்பும் இனைப்பு மூலமாக வங்கிக்கணக்கிற்கு முதலீடு செய்வதற்கான தொகையை அனுப்பி, ஆரம்பத்தில் சிறிது தொகையை இலாபமாக பெறுகின்றனர். அவ்வாறு பெறுகின்ற சிறிய இலாபத்தை நம்பிக்கையாக கொண்டு கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றனர். அந்த முதலீட்டிற்கான இலாபம் பன்மடங்குகள் பெருகியுள்ளதாக ஏமாற்றும் நபர்கள் காண்பிப்பார்கள். அதனை உண்மை என நம்பி, அந்த பணத்திலிருந்து தொகையை எடுக்க முற்படும்போதுதான், அவ்வாறு எடுக்க முடியவில்லை என்றும் தாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்கிறார்கள். பகுதி நேர வேலைக்கு ஆசைப்படும் இளைஞர்கள், தங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் வீட்டிலிருந்த படியே வேலை செய்யும் பெண்கள், கிடைக்கின்ற நேரத்தில் ஏதாவது வேலை செய்து பணம் ஈட்டலாம் என விரும்பும் குடும்பத்தலைவிகள் இது போன்ற போலியான வலைத்தளங்கள் மற்றும் இணைப்புகள் மூலம் பெரும்பாலும் ஏமாற்றப்படுகின்றனர். எனவே, வலைத்தள இணைப்பு மூலமாக முதலீடு செய்ய கோரும் ஏமாற்றுக்காரர்களிடமிருந்து வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம் எனவும், முதலீடு செய்யும் நபர்கள், குறிப்பிட்ட நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை வங்கிகள், ஆடிட்டர்கள் மூலம் தெரிந்து கொண்டு வர்த்தகத்தில் கவனமாக ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முன்பின் தெரியாத நபர்கள் இது குறித்து அனுப்பும் வலைத்தள இணைப்பை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.