தமிழ் வழியில் 12 ஆம் வகுப்புவரை படித்த மருத்துவர்களுக்கு, வேலை வாய்ப்பில் ,20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் – டாக்டர் ரவீந்திரநாத்

இது குறித்து,  இச்சங்கத்தின்  பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர் இரவீந்திரநாத் , சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில்,இன்று (18.07.2023) வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி .

ஒரு வேலை வாய்ப்பை பெறுவதற்கான கல்வி தகுதி வரை தமிழ் மொழியில் படித்தவருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது .
 இது தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற உணர்வை அதிகரிக்கும் . தமிழ் வழியில் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான கருத்தை தகர்க்கும். வேறு மாநிலத்தவர் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பை பெறுவதையும் தடுக்க உதவும். அதுமட்டுமின்றி, தமிழ் வழியில் படிப்பவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளியை சார்ந்தவர்களாக உள்ளனர் . சமூக ரீதியாகவும்,கல்வி ரீதியாகவும் , பொருளாதார ரீதியாவும், மிக மிக பின்தங்கிய,கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் .
எனவே,  இந்த இட ஒதுக்கீடு தமிழ் வழிக் கல்வியை பாதுகாப்பதுடன்,  சமூக ,கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக ,மிகவும் பின்தங்கிய ,கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பை பெற உதவுகிறது.

எனவே , இவ்வொதுக்கீடு வரவேற்புக் குரியது.

ஆனால் ,இந்த இட ஒதுக்கீடு அரசு மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பில் வழங்கப்படவில்லை.  இது வருத்தத்தை அளிக்கிறது.  மருத்துவக் கல்வி, தமிழ் வழியில் இல்லாததின் காரணமாக இவ்வொதுக்கீடு வழங்கப்பட வில்லையென்பது ஏற்புடையதல்ல. தமிழ்வழியில் மருத்துவக் கல்வி இல்லாத நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20% இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். அதற்குகந்த நடவடிக்கைகளை,தமிழ்நாடு அரசு  எடுத்திட வேண்டும்.

# கோவிட் பரவிய காலத்தில் மக்களுக்கு அர்ப்பணிப்போடு சேவை புரிந்த ,மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு, அவர்களது சேவையை போற்றும் வகையில், அரசுப் பணியில் சேர்வதற்கான, எம்.ஆர்.பி  தேர்வு மதிப்பெண்ணோடு,  கூடுதல் ஊக்க மதிப்பெண்ணை வழங்கிட வேண்டும்.

# முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், அரசுப் பணியில் இல்லாத , தனியார் மருத்துவர்கள் ( Non Service PG aspirants) கடந்த சில, ஆண்டுகளாக  மிக மிக குறைவான இடங்களையே பெற முடிகிறது. அவர்கள்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடும் விரக்தியில் உள்ளனர்.

எனவே , இப்பிரச்சனையை  சரி செய்ய, அரசு மருத்துவர்கள் ( Govt Service Doctors) மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு
( Non Govt service doctors)  சம வாய்ப்பு கிட்டும் வகையில் , தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் # சென்னையில் உள்ள,  சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான, தங்கும் விடுதி, சென்னை பாரிமுனை  பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இந்த விடுதி, சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மிக அருகில் உள்ளது. இதனால், பணிக்குச் செல்லும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மருத்துவமனைக்கு ஐந்து நிமிடங்களில் நடந்தே சென்று விட முடியும்.
இது அம்மாணவர்களுக்கு வசதியாகவும்,பாதுகாப்பாகவும உள்ளது. அவசர காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு, விரைவாகச் செல்வதற்கும் உதவிகரமாக உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளின் படியும், முதுநிலை மருத்துவ மாணவர்களின் விடுதி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலேயே இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும், அவ்விடுதி உள்ள இடத்தை, வேறு துறைக்கு வழங்குவது சரியல்ல. மாணவர்கள் விடுதிகள் ,மாணவியர் விடுதிகள் உருவாக்கவும்,  புதிய மருத்துவப் பிரிவுகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் பிரிவுகள் துவங்கிடவும் ,ராஜீவ் காந்தி மருத்துவமனையின் விரிவாக்கத்திற்கும், இம் மருத்துவமனை அருகில் உள்ள இது போன்ற  இடங்கள் அவசியமாகும். ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வெளியூரில் இருந்து வருகின்றனர்.

புற்றுநோய். இதயநோய், சீறுநீரக நோய்,மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு ,அடிக்கடி இம் மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள், தங்குமிடமின்றி அவதிப்படுகின்றனர்.  அவர்களுக்கான, தங்கும் வசதிகளும் அமைக்கப்பட வேண்டும்.  வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு ,வெளியூரில் இருந்து  வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்கிட  விடுதியை தமிழக அரசு அமைக்க உள்ளது. அது பாரட்டத்தக்கது.அதே போன்று ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் தங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.இதற்கு இட வசதி வேண்டும். ஏற்கனவெ, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் , ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகில் இருந்த ,மத்திய சிறை இடத்தை ,சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினார் என்பது நினைவு கூறத்தக்கது. எனவே, முதுநிலை மருத்துவ மாணவர்களின் விடுதி உள்ள இடத்தை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி, நீதித்துறைக்கோ அல்லது வேறு துறைக்கோ வழங்கும் முடிவை, தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

#  பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தொடர்ந்து கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். இதனால், உள மற்றும் உடல் ரீதியான கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களிடம் 8.00  மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதை கைவிட வேண்டும். கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமித்து, பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின்  பணிச்சுமையை குறைத்திட வேண்டும்.

# மருத்துவக் கல்வியில் ,அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5  விழுக்காடு இட ஒதுக்கீடு , அப்பள்ளிகளில் பயின்ற ,ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு  மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மருத்துவக் கல்லூரியில் அவர்களுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது .இந்த ஆண்டு 473 பேர் எம்பிபிஎஸ் படிப்பிலும்,133 பேர் பிடிஎஸ் படிப்பிலும் ,ஆக மொத்தம் 606 பேர் மருத்துவப் படிப்புகளில் ,சேரும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அரசுப் பள்ளிகளைப் போலவே பெரும்பாலான  அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. அத்தகைய பள்ளிகளைச் சேர்ந்த  மாணவர்களுக்கும் , மருத்துவப் படிப்பு உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் தனி உள் இடஒதுக்கீடை வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

# “நெக்ஸ்ட் “தேர்வை ,
காலவரையின்றி தேசிய மருத்துவ ஆணையம் தள்ளிவைத்துள்ளது வரவேற்புக்குரியது. அத்தேர்வை  முழுமையாக ரத்து செய்திட வேண்டும்.

# ஆண்டுதோறும் மத்திய அரசின் குடும்ப நலத்துறை ,தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பை நடத்துகிறது. அதற்கு நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே  என்று பெயர். நடப்பு ஆண்டுக்கான 2023 –  24 கணக்கெடுப்பில் ,பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த குறியீடுகளில் ஒன்றான , ரத்த சோகையை பற்றிய விவர சேகரிப்பை, பட்டியலிருந்து அகற்ற தீர்மானித்திருக்கிறது.

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 57 விழுக்காடு பெண்களும், 67 விழுக்காடு குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரத்த சோகை இல்லாத இந்தியா திட்டம் உரிய பலனை தருகிறதா?

பெண்கள் ,குழந்தைகள் மத்தியில் ரத்த சோகை குறைந்துள்ளதா?

என்பதை கண்டறிய, தற்போதைய ,தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில்,ரத்த சோகை பற்றிய ஆய்வையும்,விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.

குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையால் ,இரத்தப் போக்கு அதிகம் ஏற்படுவதாகவும்,அதனால் ஏராளமான தாய்மார்கள் இறப்பதாகவும், இரத்த சோகை பாதிப்பு அதிகரிப்பதாகவும் பரப்படும் கருத்துக்கள் தவறானவை. உண்மைக்கு மாறானவை. அறிவியலுக்குப் புறம்பானவை.

இது குடும்பக்கட்டுப்பாட்டிற்கு எதிரான மனநிலையை பெண்கள் மத்தியில் உருவாக்கும்.

# ஒன்றிய அரசு, தொடர்ந்து தேசிய மருத்துவத் திட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதப் பெயர்களை சூட்டிவருகிறது.தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு ( National Health Mission) “பிரதான் மந்திரி சமக்ரா ஸ்வஸ்தியா மிஷன்”  என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. மருத்துவத் துறையில் இந்தி,சமஸ்கிருத திணிப்பு  இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரானது.

இன்றைய ஊடவியலாளர் சந்திப்பில் , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள்  சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். சாந்தி , தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநில செயல் தலைவர்
பி.காளிதாசன், எம்.ஆர்.பி கோவிட் செவிலியர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ.ராஜேஸ்,துணைத்தலைவர் ஜி.உதயக்குமார், இணைச் செயலாளர்டி.மதியரசன், மருத்துவர்கள் எஸ்.கோவிந்தராஜன், எஸ்.கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர் .

இவண்,
டாக்டர் ஜி. ஆர் .இரவீந்திரநாத், பொதுச்செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.