மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலா தலமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையின் அனுமதி அவசியம்.  கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவி பகுதி சேதமடைந்தது. அத்துடன் கொரோனா அதிகரிக்க தொடங்கியதால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா, மணிமுத்தாறு அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பொதுமக்கள் குளிக்கலாம். மாலை 5 மணிக்குள் அருவிக்கு சென்றவர்கள் திரும்பி விட வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.