ஜி.ஆர்.மதன் கிருஷ்ணன் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர், டி.டி.எப்.வாசன், அபிராமி, குஷிதா கல்லபு, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஹரிஷ் பெரடி, சிங்கம் புலி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஐ.பி.எல். (இந்தியன் பீனல் கோட் சட்டம்). ஒரு ட்ராவல்ஸ் கம்பெனியில் கார் ஓட்டுநராக வேலை பார்த்த கிஷோர், சொந்தமாக ஒரு வாடகைக் கார் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு கார் ஓட்டுகிறார். ஒருநாள் கிஷோர் கார் ஓட்டிக் கொண்டுவரும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த வாசன் காருக்கு குறுக்கே வந்து நிற்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் வெளியே வந்து வாசனை திட்டிக் கொண்டிருக்கும்போது, வேறு ஒருநபர் மோட்டார் சைக்கிளில் வந்து கிஷோரின் மீது மோதுகிறார். இந்த சிறிய விபத்தில் கிஷோரின் கால் எழும்பு முறிந்துவிடுகிறது. இதனால் கார் ஓட்டமுடியாததால் குடும்பச் செலவுக்கு அந்த காரை வேறு ஒருநபருக்கு வாடகைக்கு விடுகிறார் கிஷோர். இதற்கிடையில் காவல்த்துறை ஆய்வாளராக இருக்கும் போஸ்வெங்கட் சாலைகளில் வரும் வாகன ஓட்டிகளிடம் கையூட்டு பெறுகிறார். அப்போது ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு தனது கைப்பேசியை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் தாம் கையூட்டு பெறுவதை படம்பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்து, அந்த நபரை காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று கொலைவெறித்தனமாக அடித்து தாக்குகிறார் போஸ் வெங்கட். இந்த அடிதாங்காமல் அந்த நபர் இறந்தும் விடுகிறார். இதனால் பதற்றமடைந்த போஸ் வெங்கட்டுக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் பேசிய அதிகாரமிக்க அரசியல்வாதி “நீ இழுத்துவந்த பையனை சிறையில் வைத்து கொன்றுவிடு” என்று கூறுகிறார். இதனால் பதற்றம் தனிந்த போஸ் வெங்கட், இந்த கொலையை அப்பாவியான கிஷோர்மீது சுமத்தி அவரை சிறையில் அடைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி சித்ரவதை செய்கிறார். கிஷோர் மறுக்கவே, காவல்த்துறை கண்காணிப்பாளாரான ஹரிஸ் பெரடி காவல்நிலையத்துக்குவந்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி கிஷோரை மிருகத்தனமாக தாக்குகிறார். காவல் நிலையத்தில் இறந்த அந்த நபர் யார்? அவரை கொலை செய்யச்சொன்ன அதிகாரமிக்க அந்த அரசியல்வாதி யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? இந்த கொலைப்பழியிலிருந்து அப்பாவியான கிஷோர் தப்பினாரா? இல்லையா? என்பதுதான் கதை. அன்பு கதாபாத்திரமாக வரும் டிடிஎப் வாசன் எவ்வித பதற்றமும் இல்லாமல் அறிமுகம் ஆகிறார். அப்போது அவர் கூறும் கருத்து அவரை பின்தொடர்பவர்களோடு பொறுந்திபோவதால் கரகோஷம் எழுகிறது. முதல் பாதிவரை வாசன் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே கூறலாம். முகபாவனைகளில் பெரிதாக நடிப்பை காட்டவில்லை என்றாலும் சண்டைக்காட்சிகளில் நம்பும்படி நடித்துள்ளார் வாசன். கிஷோர்தான் முழுப்படத்தையும் தாங்குகிறார். கால் உடைந்த நிலையில் தாங்கி தாங்கி நடப்பதில் தொடங்கி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் வசனங்களை எதார்த்தமாக பேசுவது என பிரமாதப்படுதுகிறார். அவர் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்படும் காட்சிகள் எல்லாம் விசாரணை படலத்தை பிரதிபலிப்பதாக உள்ளன. மேலும் இரண்டாம் பாதி முழுவதும் கிஷோர் தாக்கப்படுவதை காட்டுவது தொய்வாக உணர வைக்கிறது. நரேன் முதல்வராக மிரட்ட, ஜான் விஜய் ஒன்றிரண்டு இடங்களில் வில்லத்தனத்தில் முன்னேறுகிறார். ஹரிஷ் பேரடி கொடூர வில்ல முகத்தை காட்டி மிரட்டுகிறார். போஸ் வெங்கட்டும், அபிராமியும் தங்கள் பங்குக்கு படத்தை தூக்கி நிறுத்துகின்றனர். என்றாலும் படத்தில் பல எதார்த்த மீறல்கள் நிரம்பி இருக்கிறது. மதுரை சிறையில் மரணம் ஆனதை மறைக்க சென்னையில் உள்ள ஒருவரை ஏன் குற்றவாளியாக மாற்ற முயற்சிக்க வேண்டும்? அனுபவமிக்க நடிகர்களின் நடிப்பே படத்தை காப்பாற்றுகிறது. சிறைச்சாலை மரணங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு நியாபகப்படுத்திய இயக்குநரை பாராட்டலாம். உச்சக்கட்ட காட்சியில் உப்பு கொஞ்சம் குறைந்து சப்பென்று இருக்கிறது
ஐ.பி.எல்.திரைப்படம் விமர்சனம்
