அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை – நடிகை ஹன்ஷிகா மோத்வானி !

இந்தியாவெங்கும் அனைவராலும் விரும்பப்படும் நடிகையாக விளங்கும் ஹன்சிகா மோத்வானியின் திரைப்பயணம், எண்ணற்ற அற்புதமான திரைப்படங்களால் ஆனது. அவரது தொடர் வெற்றிப்படங்களும் அதில் அவரது திறமையான நடிப்பும், அவரை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாறியிருக்கிறது. நடிகை ஹன்ஷிகா தொழில்துறையில் அவரது அர்ப்பணிப்பை தாண்டி, அவரது அன்பான நல்ல உள்ளத்திற்காக திரைத்துறையில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு நபராக விளங்குகிறார். இந்த 2022 புத்தாண்டில் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மிகப்பிரமாண்டமான ஒன்பது வெளியீடுகளைப் பெற்றுள்ளதால், அவர் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.


இதில் பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ், மஹா, ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணையும் ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் மற்றும் “வாலு” புகழ் இயக்குனர் விஜய் சந்தருடன் இணையும் ஒரு படமும் அடங்கும், இது தவிர இயக்குனர் R கண்ணன் இயக்கத்தில் ஒரு திரைப்படமும் மேலும் சில படங்களின் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தவிர, அவர் சமீபத்தில் வெளியிட்ட (டிசம்பர் 30, 2021), சுனிதி சௌஹானால் இசைக்கப்பட்ட பஞ்சாபி சுயாதீன ஆல்பமான ‘ஸ்ரீம் பாகல்’ வெளியான 3 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 11-12 மில்லியன் பார்வைகளைப் பெற்று ஒரே இரவில் சார்ட்பஸ்டர் ஆல்பமாக சாதனை படைத்துள்ளது. இது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறுகையில்…,  “கடந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. குறிப்பாக, திரையுலகம் தாங்க முடியாத கடினமான சோதனைகளால் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் இந்த 2022 புத்தாண்டின் போது அனைவரின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவது, இருட்டை விலக்கி தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல், பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. திரையுலக நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள் மற்றும் ஊடகங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் இந்த கடினமான நேரத்தில் ஆதரவாக இருந்த அனைவரின் அன்பிற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். அவர்களின் அன்பு தான் இந்த உலகத்தை முன்னோக்கி பயணிக்க வைக்கிறது, இந்த கடின காலத்தில் அன்பை அள்ளித்தரும் அவர்களை ஏராளமாகக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தயாரிப்பு நிலையின் வேவ்வெறு கட்டத்தில் உள்ள எனது 9 வெவ்வேறு திரைப்படங்களை உங்களுக்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு அனைவரின் கனவுகளும் இலக்குகளும் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வெற்றிகரமாகவும் இருங்கள், மேலும் நேர்மறை எண்ணத்தை பரப்ப மறக்காதீர்கள், அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை. நன்றி…”