“தேசிங்கு ராஜா-2” திரைப்படத்தின் இசை வெளியீடு

இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு பிறகு  தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூஹி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, புகழ், சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. த்கற்போது இப்படத்தின் இசை வெளியாகியுள்ளது**********

இந்த நிகழ்வில் இயக்குநர் எழில் பேசும்போது, “ஒரு படத்தில் நடிக்கும் போது அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பது பெரிய விஷயம் கிடையாது. படம் முடிந்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்வது என்பது தான் இந்த விழாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் இந்த படத்தின் வேலைகளை முடித்துவிட்டு நான் இன்னொரு பட வேலைகளை கவனிக்க சென்று விட்டேன். ஆனால் தயாரிப்பாளர் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி அழகாக இதை முடித்துள்ளார். அந்த வகையில் சினிமாவை நேசிக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளர் நமக்கு கிடைத்துள்ளார். தேசிங்கு ராஜா படத்தில் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது விமல். இந்த இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கும் அவர்தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார். இத்தனை நடிகர்களை வைத்து நான் படம் பண்ணியது கிடையாது. இந்த படத்தில் ஸ்கிரிப்ட் வடிவமைப்பு வேற மாதிரி இருக்கும். மின்னல் மாதிரி போகும். வித்யாசாகர் சொன்னது போல ஒரு காமெடி சிரித்து முடிந்து உடனடியாக அடுத்த காமெடி வந்துவிடும். அவ்வளவு ஸ்பீடாக இருக்கும். இந்த படத்தில் காமெடி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. என்னுடைய முதல் படத்திலேயே வித்யாசாகர் இசையமைத்தார். அப்போது நல்ல பாடல்களாக கொடுத்து விட்டார். ஆனால் அவருடைய திறமை என்ன என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. இப்போது மீண்டும் அவருடன் பணியாற்றும்போது தான் பிரமிப்பாக இருக்கிறது” என்று பேசினார்.

*நாயகன் விமல் பேசும்போது,* “இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் இரண்டு படங்கள் அல்ல.. இரண்டேகால் படங்கள் பண்ணியிருக்கிறேன். கில்லி படத்தில் கொக்கர கொக்கரக்கோ பாடலில் நான் ஆடியிருக்கிறேன். இயக்குநர் எழிலுடன் இது எனக்கு இரண்டாவது படம். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் எழிலுடன் இணைந்துள்ளேன். இதற்கு முன்பு நான் நடித்த விலங்கு என்கிற வெப்சீரிஸ், போகும் இடம் வெகு தூரம் இல்லை படம் எல்லாம் சீரியஸாக இருந்தன. அந்த சமயத்தில் தான் இயக்குனர் எழில், தேசிங்குராஜா 2 படத்திற்கு என்னை அழைத்தார். அப்படி சீரியஸாக நடித்துவிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோதே அவ்வளவு ரிலாக்ஸாக, ஜாலியாக இருந்தது. இது எழில் சாரின் 25வது வருடம். அவர் இன்னும் பொன்விழா ஆண்டு காண வேண்டும். நிறைய நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். இந்த படத்தில் நடித்துள்ள ஜனாவை பொருத்தவரை எப்போதுமே ஒரு தயாரிப்பாளரின் பையன் என்பதை காட்டிக் கொண்டதே இல்லை. படம் முடிவடையும் சமயத்தில் தான் நிறைய பேருக்கு அவர் தயாரிப்பாளர் மகன் என்றே தெரிய வந்திருக்கும். அவர் இன்னும் நிறைய உயரங்களை தொட வேண்டும்” என்று பேசினார்.