“ஜோறா கைய தட்டுங்க” திரைப்பட விமர்சனம்

ஜாஹிர் அலி, சரவணா தயாரிப்பில் வினேஷ் மில்லினியம் இயக்கத்தில் யோகி பாபு, சாந்தி ரா, ஹரிஷ் பிரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாஹிர் அலி, அருவி பாலா, ஶ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஷஹாசன், நொய்ரோ நிஹார் ஆகியோரி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜோறா கைய தட்டுங்க”. யோகிபாபுவின் தந்தை தந்திரக் காட்சிகள் நிகழ்த்தும் வித்தைக்காரர். நெருப்பை மூட்டி அதிலிருந்து வெளிவரும் தந்திரக்காட்சியில் நெருப்புக்குள் சிக்கி இறந்து போகிறார். தன் தந்தையிடம் கற்ற சிறு சிறு தந்திரக்காட்சிகளை செய்து பிழைத்து வருகிறார் யோகிபாபு. தனது சொந்த ஊரான தென் தமிழகத்திலுள்ள ஒரு மலைப்பிரதேசத்துக்கு வந்து அவரின் வீட்டில் தங்குகிறார். யோகிபாபுவின் வீட்டருகிலிருக்கும் மூன்று இளைஞர்கள் யோகிபாபுவை கிண்டலடித்து தொல்லை தருகிறார்கள். அவ்வூரிலுள்ள சிறிய பாடசாலையில் யோகிபாபு தந்திரக் காட்சிகளை நடத்தும்போது படிக்கும் ஒரு சிறுமியை அழைத்து ஒரு கூண்டுக்குள் வைக்கிறார். ஆனால் அந்த சிறுமி பயத்தால் அழதவுடன் யோகிபாபுவை எல்லா பெற்றோர்களும் சேர்ந்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள். பிறகு அவரை காவலர்கள் வெளியே விட்டுவிடுகிறார்கள். பிறகு அந்த சிறுமியை யோகிபாபுவின் வீட்டருகிலிருக்கும் அந்த மூன்று இளைஞர்களும் கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள். அதை தட்டிக்கேட்கச் சென்ற யோகிபாபுவின் கையையும் வெட்டி விடுகிறார்கள். ஒரு கையை இழந்த யோகிபாபு தந்திரயுக்தியால் எப்படி பழிதீர்க்கிறார் என்பதுதான் மீதிக்கதை. நடிப்பில் தன்னுடைய தனி வழியை மறந்து சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைபோல, இயக்குநர் வினேஷ் மில்லினியம் சொன்னதை யோசிக்காமல் அப்படியே செய்திருக்கிறார் யோகிபாபு. இது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அருமையான கதையை கையிலெடுத்த இயக்குநர்,  யோகிபாபுவின் தனித்தன்மையோடு கலகலப்பாக எடுத்திருந்தால் படம் வெற்றிப்படமாக அமைந்திருக்கும். அதைவிடுத்து யோகிபாபுவை அடிவாங்க வைத்து அவரது ரசிகர்களுக்கு வெறுப்பேற்றிவிட்டார். வனப்பகுதியை செழுமையாக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் மது அம்பட்டின் உழைப்பு திரையில் தெரிகிறது. அருணகிரியின் இசை காதுக்கு இனிமை சேர்த்திருக்கிறது.