அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகர் பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா தஞ்சை மாவட்டம், மைக்கேல் பட்டியில் உள்ள பள்ளியில் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த கடந்த 9ஆம் தேதி அன்று  லாவண்யாவின் உடல்நிலை இல்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். லாவண்யா விஷம் குடித்திருந்ததையடுத்து காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறை மாணவியிடம் விசாரணை நடத்தியபோது விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் விடுதி வார்டன் தூய்மை செய்யச் சொல்வதாகவும் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்து விட்டதாகவும் கூறினார். இதனடிப்படையில் காவல்துறையினர் வார்டன் சகாயம் மேரியை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லாவண்யா மரணமடைந்துள்ளார், மாணவியின் உறவினர்களோடு பாஜகவின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று வழக்கை மாற்றிப் பதிவு செய்ய வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர். காவல் துறையின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி பலன் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தி வரும் சூழலில் மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டார் என அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை உருவாக்கும் நோக்கில் தமிழக பாஜகவினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறியிருப்பது தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். கட்டாய மதமாற்றத் தடை சட்டங்கள் அமலில் உள்ள மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் இந்த சூழலில் தமிழகத்திலும் இதுபோன்ற கோரிக்கை வாயிலாகப் பதற்றத்தை உருவாக்க பாஜக முயல்வது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. எனவே, தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு அந்த மரணமடைந்த மாணவி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதோடு மத மோதலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் அனைவர் மீதும் கடும் பிரிவுகளின் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.