”தணல்” திரைப்பட விமர்ச்சனம்

ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா, லாவண்யா, திரிபாதி, அஷ்வின், லக்‌ஷ்மி பிரியன், போஸ்வெங்கட், அழகம் பெருமாள், ஷா ரா, பரணி, செல்வா, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தணல்”. ஒரு அடுக்குமாடி வீட்டில் தங்கியிருக்கும் சில இளைஞர்களை போலீசார் சுட்டு கொல்கின்றார்கள். சிலநாட்கள் கழித்து அதர்வா காவலர் பணியில் சேர காவல் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு 5 பேர்கள் காவல் பணியில் சேர காத்திருக்கிறார்கள். இவர்களுடன் அதர்வாவையும் சேர்த்து 6 பேரையும் இரவு ரோந்து பணிக்கு ஆய்வாளர் அனுப்புகிறார். ஒரு இடத்தில் பாதாளசாக்கடை வழியாக ஒருவன் வெளியே வருகிறான். அவனை பிடிக்க 6 பேரும் விரட்டுகிறார்கள்.அவன் தப்பித்து விடுகிறான். அதனால் அவனை கண்டுபிடிக்க அவன் வெளியே வந்த பாதாளசாக்கடை வழியாக அதர்வா உள்பட அனைவரும் உள்ளே இறங்குகிறார்கள். அந்தவழி ஒரு நெருக்கமான குடிசைப்பகுதிக்கு செல்கிறது. அனைத்து காவலர்களும் அந்த குடிசைப்பகுதிக்கு வந்து தப்பி ஓடியவனை தேடுகிறார்கள். அப்போது அஷ்வின் ஒரு காவலரை வெட்டி கொலை செய்கிறார். மற்றவர்களையும் கொலை செய்ய விரட்டுகிறார். அவர்கள் ஓடுகிறார்கள் ஓடிய காவலர்கள் தப்பித்தார்களா? இல்லையா? காவலர்களை ஏன் அஷ்வின் கொலை செய்ய துடிக்கிறார்?. என்பதுதான் கதை. தற்காலத்தில் காவலர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ரவீந்திர மாதவா. அதர்வா, வலுவான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். ஆக்ஷன், காதல், கோபம் உள்ளிட்ட உணர்வுகளை நம்பவைக்கும்படியாக வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து இத்தகைய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தால் அவருக்கு சாதகமாக இருக்கும். வில்லனாக அஸ்வின் நடித்திருப்பினும், அவர் கதாநாயகனுக்கு சற்றும் குறையாத நடிப்பை வழங்கியுள்ளார். நாயகியாக லாவண்யாவுக்கு வழக்கமான வரையறுக்கப்பட்ட பங்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பரணி, ஷா உள்ளிட்ட கான்ஸ்டபிள் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் முழு உழைப்புடன் காட்சிகளை பதிவு செய்துள்ளார். நகர்ப்புற காட்சிகளிலும் குடிசைப் பகுதியின் சூழலிலும் அவர் வெளிப்படுத்திய வேலைப்பாடுகள் படத்துக்கு உயிரூட்டுகின்றன. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை, படத்தின் பதட்டத்தையும் பரபரப்பையும் அதிகரித்து முக்கிய பலமாக அமைந்துள்ளது.போலி என்கவுண்டர் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதியுள்ள இயக்குநர் ரவீந்திர மாதவா, கதை நகரும் விதத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளார்.