காவிரி நீர் கோரியும் இந்திய, கர்நாடக, தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்தும் பூதலூரில் மையப்படுத்தி தொடர்வண்டி மறியல் போராட்டம்!   காவிரி உரிமை மீட்புக் குழு பெ. மணியரசன் அறிக்கை

காவிரி உரிமை மீட்புக்குழுக் கூட்டம் இன்று (16-9-2023) தஞ்சையில் நடைபெற்றது. அதில்ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், பொருளாளர் . மணிமொழியன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன், இந்திய சனநாயக்கட்சி மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியர் ராசு, காவிரிஉரிமை மீட்புக் குழு செயற்குழு உறுப்பினர்கள் துளை இரமேசு, தி. செந்தில் வேலவன், பழ. இரசாசேந்திரன், பூதலூர் தட்சிணாமூர்த்தி, திருவாரூர் . கலைச்செல்வம், சுந்தரவடிவேலு, தனசேகரன், அக்ரி இளங்கோவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 காவிரித் தண்ணீர்ப் பகிர்விற்கு உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பைச் செயல்படுத்தத்தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயலை அமைதி காத்து ஆதரித்து வருகிறதுஇந்திய அரசு. நடப்புத் தண்ணீர் ஆண்டில் (2023-2024) தென்மேற்குப் பருவமழை இயல்பாகப் பெய்து சூலைமாதம் கர்நாடக அணைகளில் 90 விழுக்காடு நீர் நிரம்பிய நிலையிலும், தீர்ப்பின்படி சூன், சூலை, ஆகஸ்ட்டுமாதங்களுக்குத் திறந்து விட வேண்டிய, முறையே 9.19 டிஎம்சி, 31.24 டிஎம்சி, 45.95 டிஎம்சி தண்ணீரைக்கர்நாடக அரசு திறந்துவிட மறுத்து, ஒப்புக்குச் சிறிதளவு திறந்து விட்டது.

 காவிரி மேலாண்மை ஆணையத்தலைவர் சௌமித்திர குமார் ஹல்தர் நடுநிலை தவறி, கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை போவதைச் சான்றுகளுடன் காவிரி உரிமை மீட்புக்குழு சுட்டிக்காட்டியும், இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஹல்தர், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 11.8.2023 அன்று நடத்தி மிகக் குறைவாக நொடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட ஆணையிட்டார். அதைத்திறந்துவிட மறுத்து, சில நாட்கள் 5 ஆயிரம் கனஅடி திறந்து விட்டு, அதையும் பின்னர் நிறுத்திவிட்டதுகர்நாடக அரசு. கடந்த 12.9.2023 அன்று காவிரி ஒழுங்காற்றுக்குழு ஐயாயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்குத்தண்ணீர் திறந்து விடக் கர்நாடகத்திற்குக் கட்டளை (direction) இட்டது. அதைக் கர்நாடகம் முற்றிலும்மறுத்து அணைகளை மூடிவிட்டது.

 இலட்சம் ஏக்கர் குறுவைப் பயிர் தமிழ்நாட்டில் அழிந்துவிட்டது. ஒரு போக சம்பா சாகுபடி 12 இலட்சம்ஏக்கரில் செய்ய முடியாமல் தவிக்கிறது தமிழ்நாடு.

 இந்த அநீதியைத் தடுத்து, தண்ணீர் திறந்துவிட ஆணை இடுமாறு தமிழ்நாடு முதல்வர் தலைமை அமைச்சர்நரேந்திர மோடியிடம் கொடுத்த விண்ணப்பத்தின் மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மேல்தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சனநாயகசட்டப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும்எடுக்காமல் ஒதுங்கி நிற்கிறது. சட்ட மீறல் செய்யும் கர்நாடக அரசோ அடிக்கடி அனைத்துக் கட்சிக் கூட்டம்நடத்தித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றி வருகிறது. அத்துடன்கர்நாடக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்றுகோரிக்கை எழுப்பிப் போராடுமாறு கன்னட இனவெறி அமைப்புகளையும் உழவர்களையும் தூண்டி வருகிறது.

 அவசர உதவிக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு போட்ட வழக்கை விசாரித்து இடைக்கால நிவாரணமாகக்கூடஎதுவும் செய்யாமல், உச்சநீதின்றம் வழக்கு விசாரணையைத் தொடர்ந்து தள்ளிப்போட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களின் பாசனநீர், 22 மாவட்டங்களின் குடிநீர் பறிபோய்க் கொண்டுள்ளது.

 இந்நிலையில் கர்நாடக அரசின் சட்ட விரோத மற்றும் இனவெறிச் செயலைக் கண்டித்தும், நடுநிலை தவறி, கர்நாடக அரசின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும், செயலற்றுக்கிடக்கும் தமிழ்நாடு அரச்சைக் கண்டித்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்குப்பெற்றுத்தர வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்புக் குழுவும், சகோதர விவசாயிகள் சங்கங்கள், அமைப்புகள்ஆகியவையும் இணைந்து தஞ்சை மாவட்டம் பூதலூரில் 26.9.2023 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில்தொடர்வண்டி (இரயில்) மறியல் செய்வதென்று முடிவு செய்துள்ளோம்.

 அனைத்துப் பகுதி மக்களும், உழவர்களும் திரளாகப் பூதலூர் தொடர்வண்டி மறியலில் பங்கேற்குமாறு காவிரிஉரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.