“மாயபிம்பம்” திரைப்படம் விமர்சனம்

கே.ஜெ.சுரேந்தர் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம். “மாயபிம்பம்” இப்படத்தில் ஆகாஷ், ஜானகி, ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பேரூந்து பயணத்தின்போது ஆகாஷ் அப்பேரூந்தில் பயணித்திருக்கும் ஜானகியை சந்திக்கிறார். சந்தித்தவுடன் ஜானகி மீது காதல் வசப்படுகிறார் ஆகாஷ். அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அது விபத்தில் முடிகிறது. ஆனால், அந்த விபத்தே இருவரையும் மீண்டும் சந்திக்க வைப்பதோடு, பழகுவதற்கான சூழலை உருவாக்கி கொடுக்கிறது.  அந்த சூழ்நிலை மற்றும் அதில் நடக்கும் சம்பவங்களின் உண்மை பிம்பத்தை பார்க்காமல், மாயபிம்பத்தை பார்க்கும் ஆகாஷின் ஒரு செயல், அவரது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதை. ஆகாஷ், தனது இயல்பான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். காமத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் தன் மனதில் இருக்கும் காதலை அறியாமல் போனதை நினைத்து வருந்தும் காட்சிகளிலும், தன் காதலுக்கு தானே எதிரியானதை நினைத்து வருந்தும் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் முத்திரை பதித்திருக்கிறார். ஜானகி,  மிக எளிமையாக இருந்தாலும், பார்வையாளர்களை சட்டென்று கவர்ந்து விடுகிறார். அறிமுக படத்தில் மிக அழுத்தமான கதாபாத்திரத்தை இயல்பாக  நடித்து பாராட்டு பெறும் ஜானகி, நாயகனின் செயலை கண்டு அதிர்ச்சியடையும் அந்த ஒரு காட்சியிலேயே தன் மனதில் இருக்கும் காதலையும், ஏமாற்றத்தையும் கண்கள் மூலம் மிக அழுத்தமாக பதிவு செய்து  கைதட்டல் பெற்று விடுகிறார்.  எட்வின் சகாயின் ஒளிப்பதிவு கடலூர் மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களையும் ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறது. ஒளிப்பதிவில் ஆடம்பரம் இல்லை என்றாலும், பார்வையாளர்களுக்கு கதைக்களத்தில் பயணித்த உணர்வை கொடுக்கிறது. காதல் கதையாக இருந்தாலும், அதை புதிய கண்ணோட்டத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு பெரும் துணையாக பயணித்திருக்கும் படத்தொகுப்பாளர் வினோத் சிவகுமாரின் பணியும் பாராட்டுக்குரியது. எழுதி இயக்கியிருக்கும் கே.ஜெ.சுரேந்தர், காதல் கதையை அழகியல் நிறைந்த கவிதையாக மட்டும் இன்றி கனத்த இதயங்களோடு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். காதலே ஒரு காதலுக்கு எப்படி எதிரி ஆகிறது, என்பதை திரை மொழி திருப்பங்கள் மூலம் மிக சுவாரஸ்யமாக சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர். ஏனய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கதையின் கருவை சுமந்தவர்களாக நடித்து கைத்தட்டலை பெறுகிறார்கள். இப்படம் காதலர்களுக்கு அர்ப்பணம்.