“கீனோ” திரைப்பட விமர்சனம்

கிருத்திகா காந்தி தயாரிப்பில் ஆர்.கே.திவாஹர் இயக்கத்தில் மஹாதாரா பகவத், ரேணுசதீஷ், கந்தர்வா, மாஸ்டர் சிவா சுகந்த், ஆர்.கே.திவாஹர், ராஜேஷ் கோபிசெட்டி, சுந்தர் அண்ணாமலை, கண்ணதாசன், சிவம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கீனோ”. மாஸ்டர் சிவா சுகந்தனின் கண்ணுக்கு வெள்ளை நிறத்தில் கொம்பு வைத்த தலையும் கருப்பு உடையணிந்த ஒரு மனித உருவம் தெரிகிறது. அந்த உருவம், சிறுவன் சிவா சுகுந்தனை பார்த்து “நான்தான் கீனோ, என்னுடன் வா” என்று அழைக்கிறது. அந்த உருவத்தைப் பார்த்து சிறுவன் சிவா பயந்துவிடுகிறான். தனிமையில் இருக்கும் போதெல்லாம் அந்த உருவம் தன் கண்ணுக்கு தெரிவதை பெற்றோர்களிடம் சொல்லாமல் இருக்கிறான். இப்படியே நாட்கள் செல்கிறது. ஒரு கட்டத்தில் தன் மகன் ஏதோ ஒரு உருவத்தைப் பார்த்து பயப்படுவதை பெற்றோர்கள் தெரிந்து கொள்கிறார்கள். மகனை காப்பாற்ற அவர்கள் என்ன செய்தார்கள்?. சிறுவனின் கண்ணுக்கு மட்டும் தெரியும் அந்த உருவம் யார்? என்பதுதான் கதை. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்கட்டம் வரை பேய் படம்போல் காட்டியிருக்கும் இயக்குநர் ஆர்.கே.திவாஹர், உச்சக்கட்ட காட்சியில் ஒரு அற்புதமான அறிவியல் சார்ந்த படமாக சித்தரித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம் என திரைத்துறையின் அனைத்தையும் ஆர்.கே.திவாஹரே நிறைவாக செய்துள்ளார். கடவுள் நம்பிக்கை தனக்கில்லை என்றாலும், கடவுள் நம்பிக்கை கொண்ட மனைவியின்  சுதந்திரத்திற்கு தடையாக நிற்காமல் விட்டுக்கொடுத்து வாழும் திராவிட கட்சிகளின் தலைவர்களை நம் நினவுக்கு கொண்டு வருகிறார் இயக்குநர். படத்தில் நடிக்கும் அனைவரும்  ஆரவாரம் செய்யாமல் அமைதியாகாவே நடித்துள்ளார்கள். சினிமாத்தனம் சிறிதுமில்லாத யதார்த்த வாழ்வியலை. திரையில் ஓடவிட்டிருக்கிறார் இயக்குநர். சிறுவனின் கண்ணுக்குத் தெரியும் அந்த உருவம் எது என்பதை அறிவியல் ரீதியாக விளக்கும் காட்சியில், படம் பார்ப்பவர்கள் கைத்தட்டி பாராட்டும்படி செய்துவிட்ட இயக்குநருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இதுபோன்ற அறிவியல் சார்ந்த படங்கள் வந்தால்தான் திரைத்துறை வெறும் பொழுதுபோக்குத்துறையாக இல்லாமல் ஒரு பாடசாலையாக பரிணாம வளர்ச்சி பெறும்.