சிவாஜி வீட்டைக் காப்பாற்றுங்கள் – கே ராஜன் வேண்டுகோள்

ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச்  ‘திரைப்படத்தின் காணொளி வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே ராஜன் பேசும்போது: தமிழ்த் திரையின் தலை மகன் தமிழ் சினிமாவின் அடையாளம் உலக நடிகர்களுக்கெல்லாம் தலைவன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நாடகங்களில் நடித்து திரைப்படங்களில்  புகழ்பெற்று உலக நடிகனாக உயர்ந்து காட்டிய அவர் அண்ணாவால் தென்னாட்டு மார்லன் பிராண்டா என்று பாராட்டப்பட்டவர்.நடிப்பால் உலகத்தையே கவர்ந்த அந்த சிவாஜி கணேசனின் வீடு இன்று ஏலம் போவதற்கு தயாராகி விட்டது.ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது நீதிமன்றத்தில் இருந்து ஆணை வந்துள்ளது.  செய்தியைப் படித்த போது வருத்தமாக வேதனையாக இருந்தது . மூன்று கோடி கடன் வாங்கி பேரப்பிள்ளை படம் எடுத்ததில் வட்டி ஏறி 9 கோடி ஆகி உள்ளது. இன்று ஏலம் விடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. எனக்கு வருத்தமாக இருந்தது. முடிந்தவர்கள் உதவி செய்யலாம். பெரிய நடிகர்கள் பத்து பேர் சேர்ந்தால் இதைத் தீர்க்க முடியும். சிவாஜியால் கலைஞரா?   கலைஞரால் சிவாஜியா? என்கிற அளவுக்கு ஒருவரால் ஒருவர் புகழ் பெற்றனர். சிவாஜிக்கு நெருக்கமானவர்  கலைஞர். அந்த குடும்பத்தில் இருந்து வந்த முதல்வர் ஏதாவது செய்யலாம். தமிழக அரசு இதில் ஏதாவது செய்யலாம். தமிழக கதாநாயகர்கள் உதவி செய்யலாம். அல்லது நடிகர் சங்கம் உதவி செய்து அந்த சிவாஜியின் வீட்டைக் காப்பாற்றுங்கள். நான் யாரையும் குறை சொல்லவில்லை வேண்டுகோளாக வைக்கிறேன்.*******

“இந்தப் படத்தை அழகாக எடுத்திருக்கிறார்கள்.இந்த விழாவில் கேரளாவில் இருந்து வந்திருந்த அவர்கள் தமிழ் பேசிய அழகே தனி.நான் இப்போது சொல்கிறேன் நீங்கள் பேசிய தமிழ் அழகு. கதாநாயகி கூட அழகாகத் தமிழ் பேசினார். கேரளாவில் இருந்து தமிழை நம்பி வந்திருக்கிறார்கள்.தமிழையும் தமிழர்களையும் நம்பி வந்தால் எதுவும் தவறாகப் போகாது. தமிழர்கள், தான் கெட்டுப் போவார்கள் தவிர அடுத்தவர்களைக் கெடுக்க மாட்டார்கள்.வாழ வைப்பார்கள். படத்தின் பெயர் லீச் என்று உள்ளது. அப்படி என்றால் ரத்தம் உறிஞ்சும் அட்டை என்று பெயர். இன்று சமுதாயத்தில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், கோடீஸ்வரர்கள் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். கோடீஸ்வரன் மேலும் கோடீஸ்வரனாக உயர்ந்து கொண்டே போகிறான். உலகத்தில் மூன்றாவது பணக்காரர் யார் என்று உங்களுக்கே தெரியும். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். திட்டமிட்டு ஒரு குடும்பத்தையே பணக்காரர் ஆக்கி கொண்டு வருகிறார்கள். ஏழைகள் எண்பது கோடி பேருக்கு 5 கிலோ அரிசி இனாம் என்கிறார்கள். ஏன் இனமாக,இலவசமாகப் போடுகிறீர்கள்? சுதந்திரமடைந்து 75 ஆண்டு காலமாகியும் ஏன் இலவசம் தரவேண்டும்? வேலைவாய்ப்பு இல்லை. அது இல்லாமல் சிரமப்படுகிறார்கள். வேலை வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டுமே தவிர இலவசம் கொடுக்கக் கூடாது. ஏழைகள் ஏழைகளாக இருப்பது, இந்தியாவில் இன்று பேசு பொருளாக இருக்கிறது. அதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். நாம் வாழ்வோம் அடுத்தவர்களை வாழ வைப்போம். ஆன்மா மூன்று வகைப்படும். ஆத்மா, புண்ணிய ஆத்மா, மகாத்மா என்றும் மூன்று வகைப்படும். .ஆத்மா நமக்குள்ளே இருக்கிறது. நாம் நன்றாக இருக்கவேண்டும், நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று உழைத்துப் பிழைத்து ஆத்மாவைக் காப்பாற்றுகிற வகை.இது சாதாரண ரகம். நாம் நன்றாக இருக்க வேண்டும் நாம் சம்பாதித்து மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் வகை அவன் புண்ணிய ஆத்மா. தன்னைப் பற்றி எந்தக் கவலையும்  இல்லாமல் பிறர் வாழ வேண்டும் என்று மட்டும் நினைப்பவன் மகாத்மா .அப்படிப்பட்ட மகாத்மாக்கள் நாட்டில் சிலர்தான் உண்டு. மகாத்மா காந்தி, அன்னை தெரசா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அப்துல் கலாம் போன்றவர்கள் எல்லாம் மகாத்மாக்கள். இன்று தமிழ் சினிமா நொந்து போயிருக்கிறது; வெந்து கொண்டிருக்கிறது.இன்று சின்ன கம்பெனிகள் மட்டுமல்ல பெரிய கம்பெனிகளும் சிரமத்தில் இருக்கிறார்கள்.இதற்குக் காரணம் கார்ப்பரேட் கம்பெனிகள். அவர்கள் தான் சம்பளத்தை உயர்த்தி உயர்த்தி  சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முடியாத அளவிற்குச் செய்துவிட்டார்கள். இந்த லீச் பெரிய வெற்றி பெற்று மக்கள் மனதில் சென்று சேர வேண்டும்.பெரிய படங்கள் தான் ஓடும் என்ற நிலை இல்லை. சின்ன படங்கள் சென்ற ஆண்டு வெளியானதில் 10 -12 படங்கள் வெற்றி பெற்றன.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறி வாழ்த்தினார் .