சிறப்பாக நடைபெற்ற மொன்றியால் ‘மதுரகான மன்ற’ மாணவி செல்வி மிதுலா கனகசபையின் சங்கீத அரங்கேற்றம் 

நீண்டகாலமாக மொன்றியால் மாநகரில் இயங்கிவரும் மதுரகான மன்ற”த்தின் மாணவியும் அதன் நிறுவனர் செல்வமலர் மதுரநாயகம் மற்றும் சங்கீத ஆசிரியை செல்வி நயனி மதுரநாயகம் ஆகியோரின் மாணவியுமான செல்வி மிதுலா கனகசபையின் சங்கீத அரங்கேற்றம் கடந்த 11ம் திகதி சனிக்கிழமையன்று மொன்றியால் மாநகரில் உள்ள Theatre Beaubois அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இசை அரங்கேற்றத்திற்கு பக்கவாத்தியக் கலைஞர்களாக மிருதங்க இசைவாருதி வாசுதேவன் இராஜலிங்கம்-மிருதங்கம், மிதுரன் மனோகரன்- வயலின். திருவரங்கன் தபோதரன்- கடம். மோகனன் ரவீந்திரன்- மோர்சிங்.செல்வி அசீரா தாமோதரம்பிள்ளை ஆகியோர் தங்களை அர்ப்பணித்தும் தங்கள் அனுபவத்தை அந்த மேடையில் சமர்ப்பித்தும் மிதுலா அவர்களின் அரஙகேற்றத்தை ‘தூக்கி நிமிர்த்தினார்கள் என்றால் அது மிகையாகாது.

மேற்படி சங்கீத அரங்;கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் எழுத்தாளருமான லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக சங்கீத ஆசிரியை திருமதி சியாமளா சாந்தபவான் ஆகியோர் ரொறன்றோவிலிருந்து அழைக்கப்பட்டிருந்தனர்.

பிரதம விருந்தினர் லோகேந்திரலிங்கம் அவர்கள் தனது உரையில் “கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொண்டவர்கள் மற்றும் அதனை மாணவ மாணவிகளுக்கு கற்பிப்பவர்கள் என இசைத்துறை சார்ந்தவர்கள் ஒரு பக்கம் இருக்க ரசிகர்களான மற்றவர்களும் தங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த சிறந்த கர்நாடக இசை ரசிகர்களாக மாறவேண்டும். அதற்காக அவர்கள் கர்நாடக இசையின் அடிப்படைகளை குறைந்தளவாவது தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மிதுலா கனகசபை போன்ற இசைச் செல்விகளின் எதிர்கால இசையுலகம் பிரகாசம் உள்ளதாக இருக்கும். மிதுலா போன்றவர்களுக்கும் அவரது குரு நயனி மற்றும் குருவின் குரு ஆசிரியை செல்வலர் ஆகியோர்க்கும் உற்சாகம் தருவதாக இருக்கும். அத்துடன் கர்நாடக இசையின் உள்ளே அடங்கியிருக்கும் தெய்வீகம்- தமிழ் மொழியின் வளம் மற்றும் எமது தமிழ் இனத்தின் பண்பாடு ஆகியவற்றைக் காத்திட நாம் கர்நாடக இசையின் பெருமைகளை உணர்ந்து அதன் ரசிகர்களாக மாறவேண்டும்”: என்றார்

சிறப்பு விருந்தினர் ஶ்ரீமதி சியாமளா சாந்தபவான் தனது உரையில் அன்றைய இசைச் செல்வி மற்றும் அரங்கேற்ற நாயதி மிதுலாவின் திறமை. பக்குவம் மற்றும் அவரது அவரது குரு நயனி மதுரநாயகம் மற்றும் குருவின் குரு ஆசிரியை செல்வலர் மதுரநாயகம் ஆகியோரின் கற்பித்தல் திறனையும் பாராட்டினார். இறுதியில் பிரதம விருந்தினர் மற்றும் பக்கவாத்தியக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரை மிதுலா அவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து பாராட்டினர். வயதில் இளையவராக இருந்தாலும் தான் கற்ற கர்நாடக இசையையும் அதன் கட்டுக்கோப்புக்களையும் உணர்ந்தும் கீழ்ப்படிந்தும் மேடையில் தனது இசைப் பங்களிப்பை வழங்கிய மிதுலா கனகசபை என்னும் இசைச் செல்வியை அனைவரும் பாராட்டிச் சென்றனர்.

சத்தியன்