‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் நீலாவணன் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் சூட்டினர்
“கனடாவில் வாழ்ந்தாலும் தினமும் உலகெங்கும் உள்ள படைப்பாளிகளுடன் உரையாடுவது. அவர்களின் படைப்புக்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது. அந்த படைப்பாளிகளை இணையவழி கருத்தரங்குகளின் மூலம் உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களோடு இணைத்துக் கொள்ளல் போன்ற தனது இயல்பான இலக்கியப் பணிகள் மூலம் அகிலேஸ்வரன் சாம்பசிவம் என்னும் எழுத்தாளர் ;அகில்’ அவர்கள், தமிழக மற்றும் தாயக எழுத்தாளர்களையும் இலக்கியத் திறனாய்வாளர்களையும் புலம்பெயர் படைப்பாளிகளோடு இணைக்கும் பணியினை இதயசுத்தியுடன் ஆற்றிவருகின்றார்”
;இவ்வாறு கனடாவிலிருந்து வெளிவரும் இலக்கியவெளி’ சஞ்சிகையின் நீலாவணன் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பலரும் புகழாரம்
சூட்டினர். கடந்த 18-10-2025 சனிக்கிழமையன்று ஸ்காபு றோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் தங்கராசா சிவபாலு அவர்கள் தலைமை வகித்தார். எழுத்தாளர் ஶ்ரீரஞ்சினி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வாழ்த்துரைகளை டாக்டர் லம்போதரன். வைத்தியர் போல் ஜோசப், கலாநிதி செல்வநாயகி ஶ்ரீதாஸ், செ. ஜெயானந்தசோதி. ‘உதயன்; பிரதம ஆசிரியரும் எழுத்தாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம், கனடா தமிழ்க் கவிஞர்கள் கழகத்தின் தலைவர் க. குமரகுரு, கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் க. ரவீந்திரநாதன், மற்றும் கவிஞர் அகணி சுரேஸ் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.
எழுத்தாளர் கனி விமலநாதன் அவர்களின் கவிதா நிகழ்வும் இடம்பெற்றது.
‘இலக்கியவெளி’ நீலாவணன் சிறப்பிதழை பாவலர் மாவிலி மைந்தன் சண்முகராஜா வெளியிட்டு வைத்து உரையாற்றினார். சஞ்சிகையில் வெளிவந்துள்ள படைப்புக்கள் தொடர்பாக விமர்சன உரைகளை கவிஞர் மா. சித்திவிநாயகம், கலாநிதி மைதிலி தயாநிதி. மற்றும் கலாநிதி பார்வதி கந்தசாமி ஆகியோர் ஆற்றினர்
சபையில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் மற்றும் கனடா தமிழ்க் கவிஞர் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் பலரும் ஏனைய கலை இலக்கிய நண்பர்களும் ஆர்வத்தோடு அங்கு கூடியிருந்தார்கள்.
வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பலரும் சஞ்சிகையின் பிரதிகளை பெற்றுச் சென்றனர். அன்றைய தினம் ஸ்காபுறோ மற்றும் ரொறன்ரோ ஆகிய நகரங்களில் பல தமிழர் விழாக்கள் இடம்பெற்றாலும், ‘இலக்கியவெளி’ நீலாவணன் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவிற்கு மண்டபம் நிரம்பிய ஆர்வலர்கள் கலந்து கொண்டமை அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.
இறுதி எழுத்தாளரும் ‘இலக்கியவெளி’ சஞ்சிகையை தவறாது வெளியிட்டு வருபவருமான அகில் அவர்கள் நன்றியுரையாற்றுகையில் எழுதுவதும் சஞ்சிகைகளை வெளியிடுவதும் பல சவால்கள் நிறைந்த பணிகளாகத் தோன்றினாலும் சக எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகியோர் அளிக்கின்ற ஆதரவும் அவர்கள் காட்டும் ஆர்வமும் என்னைப் போன்றவர்களை தொடர்ச்சியாக இவ்வாறான பணிகளில் ஈடுபடச் செய்கின்றன என்றார்