“சென்னை பைல்ஸ் முதல் பக்கம்” திரைப்பட விமர்சனம்

மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் அனிஷ் அஸ்ரப் இயக்கத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமைய்யா, கிங்ஸ்லி, மகேஷ் தாஸ், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சென்னை பைல்ஸ் முதல் பக்கம்”. துப்பறியும் எழுத்தாளரின் மகன் வெற்றி, தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை தொடர்கதையாக எழுத சென்னைக்கு வருகிறார். சென்னையில் காவல்த்துறை ஆய்வாளராக இருக்கும் தம்பி ராமையாவின் நட்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் சென்னையில் சில மர்மமான தொடர் கொலைகள் நடக்கின்றன. இந்த்க கொலைகளுக்கான காரணத்தையும் கொலையாளி யார் என்பதையும் கண்டுபிடிக்க வெற்றியும் தம்பி ராமைய்யாவும் துப்பறிகிறார்கள். கொலைகாரன் யார்?  எதற்காக கொலை செய்கிறான்? என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. துப்பறியும் கதையில் வெற்றியை பார்ப்பது புதிதல்ல என்றாலும், அவரது நடிப்பு இந்த படத்தில் சற்று புதிதாகவும், நல்ல முன்னேற்றமாகவும் இருக்கிறது. வழக்கு விசாரணை மற்றும் துப்பறியும் காட்சிகளில் வழக்கமான உடல்மொழியோடு நடித்தாலும், நடனம், ஜாலியாக பேசி நடித்திருப்பது போன்றவற்றால், ஒரே மாதிரியான நடிப்பு என்ற தனது குறையை முற்றிலும் தவிர்த்துவிட்டு, சிறப்பாக நடித்திருக்கிறார்,  சில்பா மஞ்சுநாத்துக்கு, காதல் காட்சிகளும், பாடல்களும் இல்லையென்றாலும் உச்சக்கட்ட காட்சியில் முகம் காட்டுகிறார். தம்பி ராமையா தனது வழக்கமான நகைச்சுவையாக நடித்தாலும் குணச்சித்திர வேடத்தில் பார்வையாளர்களை கலங்க வைககிறார். வில்லனாக நடித்திருக்கும் மகேஸ்தாஸ்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். அதனால் அவரின் வில்லத்தனத்துக்கே படம் முழுக்க முன்னுரிமை கொடுத்து இயக்கியுள்ளார் இயக்குநர் அனிஸ் அஸ்ரப். இசையமைப்பாளர் ஏ.ஜே.ஆர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பதிவு செய்திருக்கும் இயக்குநர் திரைக்கதையை வணிகரீதியில் இயக்கி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்.