‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா –  சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மகிழினி கலைக்கூடம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாரதா மணிவண்ணன் மற்றும் மகிழினி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.******

இந்நிகழ்வில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ”தயாரிப்பாளர்கள் நல்லதொரு இயக்குநருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். கட்டிட தொழிலாளியான இயக்குநரின் கனவை நனவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் கட்டிட தொழிலாளி என்பதால் எந்த கல்லை எங்கு வைக்க வேண்டும், எந்தக் கலவையை எங்கு பூச வேண்டும், ஜன்னலை எங்கு வைக்க வேண்டும், வாசக்காலை எங்கு வைக்க வேண்டும், பெட்ரூம் எப்படி இருக்க வேண்டும், கிச்சன் எப்படி இருக்க வேண்டும், எந்த அகலம்- எந்த நீளம் இருக்க வேண்டும்,  என்பதை பார்த்து பார்த்து தெரிந்து கொண்டு படைப்பை உருவாக்கி இருக்கிறார் என முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. ஒவ்வொரு இயக்குநரையும் கட்டிட கலைஞருடன் தான் ஒப்பிடுவார்கள். இவர்கள்தான் கதையை எங்கு, எப்படி ஆரம்பிப்பது, எப்படி எடுத்து செல்வது, அந்த கதையில் கதாநாயகனின் பிம்பம் என்ன, கதாநாயகியின் வேலை என்ன,  நாம் சொல்லக்கூடிய சாராம்சம் என்ன, இந்த கதையின் முடிச்சு என்ன என ஏராளமான இன்ஜினியரிங் வேலைகளை பார்க்க வேண்டியது ஒரு இயக்குநரின் பொறுப்பு. நானும் ஒரு காலத்தில் மிகச்சிறந்த கட்டிட கலைஞராக இருந்தவன் தான். அதனால் இந்தப் படம் நன்றாக இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தழுவி இப்படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் பாடல்கள் அழகாகவும், நன்றாகவும் இருக்கின்றன. படத்தில் இடம்பெற்ற ‘தீம் சாங்’கும் நன்றாக இருக்கிறது. கதாநாயகி  ஓரியண்டட் ஸ்கிரிப்டான இந்த திரைப்படத்தில் சஞ்சீவ் – இளயா போன்றவர்கள் நடித்திருப்பதை பாராட்ட வேண்டும்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த திரைப்படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும். இன்றைய சூழலில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த திரைப்படத்தை 40 அல்லது 50 திரையரங்குகளில் தினசரி மூன்று கட்சியாகவோ நான்கு காட்சியாகவோ திரையிடுமாறு திரையரங்க உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரு தியேட்டரில் மூன்று காட்சிகளாக ஒரு படம் வெளியானால் தான் ‘மௌத் டாக்’ மூலம் படத்திற்கான விளம்பரம் சில நாட்களில் கிடைக்கும்.‌ அப்போதுதான் இது போன்ற நல்ல படங்கள் மக்களை சென்றடையும். இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்தக் குழுவினருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்றும் வாழ்த்துகிறேன்,” என்றார்.