மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆலோசணை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சென்னையில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தமிழக முதல்வருடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்திற்கு வெளியில் உலகிலேயே அதிகம் தமிழர்கள் வசிக்கும் நாடான மலேசியாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வருகை தர வேண்டும் என்று அமைச்சர் சரவணன் கேட்டுக் கொண்டார்.  உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு மலேசியாவில் தொடர்வதற்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம் என்று டத்தோஸ்ரீ சரவணன் முதல்வரிடம் உறுதியளித்தார். 

தமிழக முதல்வருடனான சந்திப்பில் தொழிலாளர்கள் தொடர்பாக இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் எடுத்துரைத்தார். மலேசிய சமூக பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஹனிஃபா, மலேசியா பாதுகாப்பு அமைப்பின் செயல்முறை அலுவலர் டத்தோஸ்ரீ அஸ்மான், மலேசிய மனிதவள அமைச்சின் திறன் மேம்பாட்டு வாரியத் தலைவர் டத்தோ ஷாகுல் ஹமீத் தமிழக ஹிந்து சமயம் மற்றும் அறவாரிய அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் சந்திப்பில் உடன் இருந்தனர். தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகள், மறுசீரமைப்பு வாய்ப்புகள், வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சுற்றியுள்ள பிற பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டதாக மனித வள அமைச்சர் சரவணன் தெரிவித்தார்.