சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை மாதந்தோறும் அல்லது மாதத்திற்கு 2 முறை என்ற அடிப்படையில் மாற்றி அமைத்து வருகின்றன. இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.610-ல் இருந்து ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கியாஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 4-ந்தேதி ரூ.25, பிப்ரவரி 15-ந்தேதி ரூ.50, பிப்ரவரி 25-ந்தேதி மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, மார்ச் 1-ந்தேதி ரூ.25 உயர்த்தப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்குள் சிலிண்டர் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ந்தேதி விலை ரூ.10 குறைக்கப்பட்டது. அதன்பின்னரும் கியாஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இறுதியாக கடந்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.875.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி, நேற்று முதல் ஒரு கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.900.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம், கடந்த ஓராண்டில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.285 அதிகரித்துள்ளன. அதே நேரம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.75 உயர்ந்து, ரூ.1831.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து புரசைவாக்கத்தை சேர்ந்த காமாட்சி உள்ளிட்ட பல்வேறு இல்லத்தரசிகள் கூறியதாவது:-
மாநகரில் குடிசை முதல் அரண்மனை வரை அனைத்து பகுதிகளிலும் 99 சதவீதம் வீடுகளில் சமையல் கியாஸ் சிலிண்டர் தான் பயன்படுத்தப்படுகிறது. விறகு அடுப்புகளை எவரும் பயன்படுத்துவதில்லை. விறகுகள் கிடைக்காததால் மீண்டும் விறகு அடுப்புக்கு செல்ல முடியாத நிலையும் உள்ளது. மாதந்தோறும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வு, சாமானிய மக்களை கவலை அடைய செய்துள்ளது. இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தற்போது சிலிண்டர் விலை ரூ.900, சிலிண்டர் கொண்டு வருபவருக்கு தரை தளமாக இருந்தால் ரூ.50, மாடியாக இருந்தால் ரூ.100 என்று வழங்க வேண்டியிருக்கிறது. விலை உயர்வு பற்றி கேட்டால் எண்ணெய் நிறுவனங்கள் மீது அரசுகள் பழியை போடுகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்காமல் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஓட்டலில் வாங்கி சாப்பிடும் நிலைக்கு பொதுமக்களை தள்ளிவிட கூடாது. தவறும் பட்சத்தில் அடுப்பு மற்றும் சிலிண்டர்களை தூக்கி கொண்டு எண்ணெய் நிறுவனங்களை தேடி செல்ல வேண்டிய அவலநிலை தான் உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்.