பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஜூன் 28-30 மூன்று நாட்கள் நாடு தழுவிய போராட்டம் – திருமாவளவன்

பாஜக ஆட்சி கடைபிடித்துவரும் மக்கள் விரோதக் கொள்கைகளின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் சுரண்டும் விதமாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலையை பாஜக அரசு உயர்த்தி வருகிறது. பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்துவதென்று முடிவு செய்து உள்ளோம். அதனடிப்படையில் எதிர்வரும் 28,29 ,30 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களில் சனநாயக சக்திகள் பெருந்திரளாகப் பங்கேற்று இந்திய ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க முன்வரவேண்டுமென அழைக்கிறோம். கச்சா எண்ணெய்யின் விலையைக் குறைக்குமாறு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை ( OPEC) வலியுறுத்தும் பாஜக அரசு ஏழை எளிய நடுத்தர மக்களை வாட்டிவதைக்கும் விதமாக செஸ்(Cess) என்னும் கூடுதல் வரியை விதித்து பெட்ரோல் டீசல் விலையை செயற்கையாக உயர்த்திச் சுரண்டுவது ஏன்? கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டும்தான் ஒரே வழி என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். மக்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதை உத்தரவாதப்படுத்தாத பாஜக அரசு அந்தத் தடுப்பூசியிலும்கூட தமக்கு வேண்டிய தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் சம்பாதிக்க உதவுகிறது. மோடி அரசு தடுப்பூசி விநியோகத்தை சரிவர செய்யவில்லை என்பதால் உச்சநீதிமன்றமே தலையிட்டு அதை முறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நெருக்கடியான காலத்தில் மக்கள் சந்தித்துவரும் கடுந்துயரத்தைப் போக்கும் கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் ஜூன் 16 முதல் இருவார கால நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகத் தமிழ் நாட்டில் இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து நாளை 28.06.2021 தொடங்கி 29, 30 தேதிகளில் (செவ்வாய், புதன், வியாழன்) மூன்று நாட்கள் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளோம்.
கோரிக்கைகள்:
———————
1) நாளுக்குநாள் தாறுமாறாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி, 2014 முதல் உயர்த்தப்பட்ட கலால் வரிகளை பெருமளவு குறைத்து. விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
 
2) கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு மருந்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தைத் தடுப்பதோடு, அவற்றின்மீதான ஜிஎஸ்டி வரியை முற்றாக நீக்கி, நியாயமான விலையில் மக்களுக்கு மருந்துகள் தட்டுபாடின்றிக் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
 
3) செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ டெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தைத் தமிழ்நாடு அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும்.
 
4) தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான தடுப்பூசி மருந்துகளும், பேரிடர் கால நிவாரண நிதியும் வழங்க வேண்டும்.
 
5) அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 
6) தொழில் முடக்கம், வேலையிழப்பு, வேலையின்மை மற்றும் வருமானத்திற்கு வழியில்லாத காரணங்களால் வாழ்வாதரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7500/= வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்களுக்கு வழங்க வேண்டும்.
 
7) மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து நபருக்கு தலா 10 கிலோ வீதம் உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளுக்காக இடதுசாரி கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து , மக்களின் நலன்களைக் காப்பதற்காக நடத்தும் இந்த ஆர்பாட்டங்களில் அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.