மத நம்பிக்கை குறித்து அவதூறு பேச்சு: பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை

லாகூர்: பாகிஸ்தானில் மத நம்பிக்கை குறித்து அவதுாறாக பேசிய தனியார் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில், தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சல்மா தன்வீர் முஸ்லிம்களின் இறை துாதர் குறித்து 2013ல் அவதுாறாக பேசியுள்ளார். தன்னை இறை துாதர் என கூறியுள்ளார். இதுகுறித்து மதகுரு ஒருவரது புகார் தொடர்பாக சல்மா தன்வீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் விசாரணை லாகூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, ‘சல்மா மனநிலை பாதிக்கப்பட்டவர்’ என, அவரது வழக்கறிஞர் கூறினார்.பஞ்சாப் மனநல மருத்துவக் கழக பரிசோதனையின் முடிவில், அவர் மனநலம் பாதிக்கப்படாதவர் என அறிக்கை தாக்கலானது. இதையடுத்து சல்மாவுக்கு மரண தண்டனை விதித்து, நீதிபதி மன்சூர் அஹ்மத் தீர்ப்பளித்தார். பாக்.,கில் மத நம்பிக்கையை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு இதுபோல் கடும் தண்டனை வழங்குவது வழக்கமாக உள்ளது.