*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?*

*ஆங்கிலமும், மலாய்மொழியும், தமிழும்* ஆக

         ஆரம்பக் கல்வியெனப் பயிலு கின்ற

தூங்கிவழி யாததமிழ்ப் பிள்ளை கள்தாம்

      தொடர்ந்தாற்போல் இன்னல்பல சந்திக் கின்றார் ;

தாங்கமுடி யாதபல சுமைகள் தம்மைத்

       தமிழ்ப்பெற்றோர் எதிர்நோக்கி வருவ தாலே

ஆங்கிலமும் மலாய்மொழியும் போதும் ,மேலும்

       அதிசுமையாய்த் *தமிழ்வேண்டாம்* என்கின் றாரே !

மும்மொழியைப் படிப்பதற்கே மாண வர்க்கு

    முதலுதவி செய்கின்ற *பெற்றோர்* தாமும்

சம்மட்டி அடிவாங்கித் தவிக்கும் போது

     *சமற்கிருத மொழிபயில* மாண வர்க்குச்

சம்மதமாய் இருந்திடுமா ; பெற்றோ ருக்கும்

      சரிப்படுமா *சமற்கிருதம் ?* யோசி யுங்கள் !

நிம்மதியை அளித்திடுமா ? இதுவும் போக

      நிச்சயமாய் சமற்கிருதம் *தேவை தானா ?*

தமிழ்மொழியில் சமற்கிருதக் கலப்பை ஏற்கச்

     சரியான காரணமே இல்லை என்று

தமிழ்க் *கம்பன்* இராமனது காவி யத்தில்

      சமற்கிருதப் பெயர்மறுத்துக் கதைமாந் தர்க்கே

தமிழ்ப்பெயரை வைத்தரிய *புரட்சி செய்தார் !*

     *தயரதன், லக்குமணன்* போன்ற தோடு

தமிழ்ப்பெயர் *வி பீடணன்* என் றாரே   அன்றே

      தமிழ்ப்பெருமை காட்டினனே கவிக்கோ கம்பன் !

இந்தயுகம் *கணினியுகம்* என்ப  தாலே

       இருக்கின்ற கணினியதன் *கட்ட ளைச்சொல்*

அந்த *சமற் கிருதத்தில்* இல்லை ; ஏனாம் ?

     அவசியமே அதற்கில்லை அதனால் என்று

முந்திநின்று கணினியுடை *தமிழ்வ ளர்க்கும்*

      *முத்துநெடு மாறன்* அவர் சொல்லு கையில்

எந்தவகை *சமற்கிருதம்* தமிழர்க் கென்றும்

      இவ்வுலகில் உதவிசெயும் ? சிந்திப் பீரே !

உண்மையிதைத் தெரிந்தபினும் இங்கே யார்தான்

      உதவாத சமற்கிருதம் தேவை யென்பார் ;

நன்மையென எண்ணிடுவார் ; எண்ண மாட்டார் !

    ஞாயந்தான் என்கருத்தில்  எனநி னைத்தே

வன்மையுடன்மறுத்திடுவீர் தமிழ்ப்பெற் றோரே

       வளமில்லா சமற்கிருதம் தவிர்த்தே நிற்பீர் !

தொன்மைமிகு இந்தியத்து மொழிக ளுள்ளே

        பன்மைவளத் *தமிழ் ஒன்றே* முதல்தே வையே !

                                                                            *பாதாசன்*