புதுவைப் பல்கலைக்கழகத்தில்  ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ணக் கொடிப் பேரணி

புதுவைப் பல்கலைக்கழகத்தில்,  இந்திய ஆயுதப்படைகளின் வெற்றிகரமான நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கௌரவிக்கும் வகையில், மிகுந்த உற்சாகத்துடன் ஒரு பெரும் தேசபக்திப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள்,  முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களையும்முக்கிய பிரமுகர்களையும் துணை வேந்தர் பேராசிரியர் ப. பிரகாஷ் பாபு வரவேற்று, உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தலைமை ரெக்டருமான திரு கே. கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பேரணியை துவக்கிவைத்தார். இதில் புதுச்சேரி அரசின் உள்துறை மற்றும் கல்வி அமைச்சர்  திரு ஆ. நமச்சிவாயம், காலாபட்டு   சட்டமன்ற உறுப்பினர் திரு பி.எம்.எல்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்தப் பேரணியில், புதுச்சேரி பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லுரியான சமுதாய கல்லூரி மற்றும் இணைப்பு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், என்சிசி (NCC), என்எஸ்எஸ் (NSS) தன்னார்வலர்களும் அடங்குவர். மாணவர்கள் தேசியக் கொடிகள் மற்றும் தேசபக்திப் பதாகைகளை ஏந்திச் சென்று, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை உறுதிப்படுத்திய இந்திய வீரர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் தங்கள் நன்றியையும், ஆதரவையும்,  ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தி தேசபக்தி முழக்கங்களை எழுப்பினர். நமது இந்திய ஆயுதப்படைகளின் ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டின் வெற்றியைக் கௌரவிக்கும் வகையிலும், பல்கலைக்கழக சமூகத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும், புதுச்சேரி பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகளை, துணை நிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பாராட்டினார். தொடக்க உரையில் துணை வேந்தர் பேராசிரியர் ப. பிரகாஷ் பாபு பேசுகையில், இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இளைஞர்களிடம் காணப்படும் தேசிய உணர்வும், தீவிரமான பங்கேற்பு உணர்வும் பாராட்டத்தக்கவை எனவும் குறிப்பிட்டார்

 பல்கலைக்கழக வளாகத்தின் முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணி, தேசபக்திப் பாடல்களுடன் முடிவடைந்தது. இந்திய வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்த இந்த நிகழ்வு, பங்கேற்பாளர்களிடையே தேசப்பற்று உணர்வை வலுப்படுத்துவதாக அமைந்தது. பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில், இத்தகைய முயற்சிகள் மூலம் புதுச்சேரி பல்கலைக்கழகம் உறுதியான பங்களிப்பை வழங்கி வருகிறது.நிகழ்ச்சியில் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பல்கலைக்கழகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.