“தம்பி கலக்கிட்டான்” ; மிஸ்டர் எக்ஸ் கவுதம் கார்த்திக்கு ஆர்யா பாராட்டு

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை  தயாரிப்பில்  மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா,  அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,  காளி  வெங்கட்  மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது.

*இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா பேசும்போது,* “இந்த படத்துக்கு எனக்கு சிபாரிசு செய்ததே தயாரிப்பாளர் S. லஷ்மன் குமார் தான். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு இது மிகப்பெரிய பட்ஜெட் ஆகுமே என தயாரிப்பாளரிடம் கேட்டபோது, ரசிகர்களுக்கு பிரமிப்பான திரையரங்கு அனுபவத்தை கொடுப்பதற்காக சமரசம் இல்லாமல் இந்த படத்தை எடுத்து தான் ஆக வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார். இப்போ இருக்கும் காலகட்டத்தில் ஓடிடி எல்லாவற்றையும் தாண்டி திரையரங்குகளை மட்டுமே நம்பி நாம் படம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் தான் லப்பர் பந்து. அதனாலேயே அவர் இந்த கதை மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.  இயக்குநர் மனு ஆனந்த் எல்லாவற்றிலும் பர்ஃபெக்சன் ஆக இருக்கக்கூடியவர். எந்த ஒரு காட்சியையும் அழகான முன்கூட்டிய திட்டமிடலுடன் படமாக்கினார். அதனால் தான் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் எடுக்க வேண்டிய படத்தை சரியான நேரத்திற்குள் எடுத்து முடித்தார். இந்தப் படத்திற்காக மும்பையில் தண்ணீருக்கு அடியில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது அப்போது என்னுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளரும் தண்ணீருக்குள் டைவ் அடித்து இந்த காட்சிகளைப் படமாக்கினார். இப்படி ஒரு ஒளிப்பதிவாளரை பார்ப்பது ரொம்பவே அரிது. ஆக்சன் படம் என்பதால் இசை ரொம்பவே முக்கியம். இசையமைப்பாளர் திபு நிணன்  அந்த அளவிற்கு இந்த படத்திற்கு தனது ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளார். சில்வா மாஸ்டர் கிட்டத்தட்ட 80 நாட்கள் இந்த படத்தில் பணியாற்றினார். படம் முழுவதுமே ஒரு ஆக்சன் மூடு இருக்கும். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட படத்தின் இணை இயக்குநர் போலவே அவர் பணியாற்றினார்.

கவுதம் கார்த்திக் ரொம்பவே கூலான, அதேசமயம் ஒரு செக்ஸியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷான ஒரு நடிப்பை அவர் கொடுத்துள்ளார். நானும் மனுவும் பேசும் போது கூட “தம்பி கலக்கிட்டான்” என்று தான் அவரது நடிப்பைப்  பற்றி கூறுவோம். இந்த கதாபாத்திரத்தை தமிழில் இவரைத் தவிர வேறு யாருமே பண்ண முடியாது என்பது போல சரத்குமாருக்கு என அளவெடுத்து தைத்த சட்டை போன்று அவரது கதாபாத்திரம் அமைந்துவிட்டது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியில் அவர் நடித்திருந்தார். இப்படி எல்லாம் இந்த வயதில் பண்ண முடியுமா என பிரமித்துப் போனேன். மஞ்சுவாரியார் இந்த படத்தில் கதாநாயகியாக கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை என்று மனு ஆனந்த் புலம்பும் அளவுக்கு இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரொம்பவே வலுவானது. கிட்டத்தட்ட ஆறு மாதமாக அவரைப் பின் தொடர்ந்து இந்த படத்திற்கு நடிக்க அழைத்து வந்துள்ளார். நாயகி அனகா ஒவ்வொரு காட்சிக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள் கேட்பார். ஒரு படத்தில் கூட இவ்வளவு சந்தேகங்கள் கேட்க முடியுமா என ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அவை ஆரோக்கியமானதாக இருக்கும். அதுல்யா ரவி, ரைஸா வில்சனும் ஆக்சன் காட்சிகளுக்காக தினசரி ஆறு மணி நேரம் ரிகர்சல் எடுத்தார்கள். காரணம் பெண்கள் சண்டை போடுகிறார்கள் என்றால் பார்ப்பதற்கு அது போலியாக இருப்பது போல் இருக்கக் கூடாது என்பதற்காக அவ்வளவு மெனக்கெட்டார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்த படத்தில் மட்டுமே நடித்தேன். இந்த படம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

*தயாரிப்பாளர் S.லஷ்மன் குமார் பேசும்போது,* “இந்த படம் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு படம். மனு ஆனந்த் எஃப்ஐஆர் படத்தை முடித்துவிட்டு இந்த கதையை எங்களிடம் சொன்னார். சொன்னபோது எதுவுமே நம்புகிற மாதிரி இல்லை.. ஆனால் அவர் சொன்ன நான்கு சம்பவங்கள் பற்றி கூறியதும் தான் அவற்றை நம்ப முடிந்தது. 1965ல் இந்தியாவின் உளவுத்துறை அமைப்பு சீனாவை சமாளிப்பதற்காக இமயமலையில் உள்ள நந்தாதேவி மலைக்கு ஏழு புளூடோனியம் கேப்சூல்ஸ் எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் அங்கு எதிர்பாராமல் அவை தொலைந்து விடுகின்றன. இப்போது வரை அவை கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கின்றன. நினைத்துப் பார்க்க முடியாத ஆபத்து நிறைந்த ஒரு விஷயம் அது. 1977-ல் அமெரிக்காவில் வெளியான ஒரு பத்திரிக்கை செய்தி மூலமாகத் தான் இது வெளியே தெரிய வந்தது. இந்த படத்தின் ஆரம்பப் புள்ளியே அதுதான். அப்படி ஒரு நியூக்ளியர் கேப்ஸ்யூல் காணாமல் போனதன் பின்னணி, அதன் விளைவு ஆகியவற்றை உண்மைக்கு ரொம்ப நெருக்கமாக கொஞ்சம் கற்பனை கலந்து உருவாக்கியுள்ளோம். போலீஸ் அதிகாரிகளுக்கு, ராணுவ வீரர்களுக்கு அவர்களுக்கான செயல்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. ஆனால் நாட்டுக்காக தங்களை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணியாற்றும் உளவுத்துறை வீரர்களுக்கு அது கிடைக்காமலேயே போய் விடுகிறது. சர்தார் படத்திற்காக அந்த படத்தில் பணியாற்றிய இரண்டு நடிகர்களின் தந்தைகளே கூட இப்படி உளவுத்துறையில் பணியாற்றியவர்கள் தான். அந்த சமயத்தில் கதைக்காக பேசும்போது தான் அது அவர்கள் பற்றிய உண்மை தெரிய வந்தது. அவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்புக்காக தடுத்து நிறுத்திய விஷயங்கள் பல.. அப்படி வெளியே தெரியாமல் போன அந்த வீரர்களின் தேசப்பற்றுக்கு காணிக்கை செலுத்தும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கதையை எடுத்துக் கொண்டாலும் ரொம்பவே கற்பனையை விரித்து விடாமல் நிஜத்திற்கு பக்கத்தில் இருந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். இப் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நடிகர்கள் அனைவருமே ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார்கள். இந்த படத்துக்காக போடப்பட்ட செட்டுகளாகட்டும் அல்லது நிஜமான லொகேஷன் ஆகட்டும் எல்லாமே பிரம்மாண்டமானவை தான். ரசிகர்களுக்கு நிச்சயமாக திரையரங்கு அனுபவத்தை இந்த படம் தரும் என நம்புகிறோம்” என்று கூறினார்.

*நடிகர் கவுதம் கார்த்திக் பேசும்போது,* “இந்தப் படம் நான் எதிர்பார்த்ததை விட நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து உருவாக்கலாம். ஆனால் அதில் நடிப்பவர்களை பாதுகாப்பதில் சில்வா மாஸ்டர் மிகுந்த அக்கறை காட்டினார். அது மட்டுமல்ல ரொம்பவே வித்தியாசமான முறையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக க்ளைமாக்ஸில் நடக்கும் இறுதிச் சண்டைக் காட்சிக்காக ரைஸா, அனகா, அதுல்யா ரவி ஆகியோர் கடுமையாக ரிகர்சல் செய்ததை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். மஞ்சு வாரியருடன் முதல் காட்சியில் நடிக்கும் போது அவரைப் பார்த்து பிரமித்துப் போய் அப்படியே நின்று விட்டேன்.  ஏற்கனவே ஒரு படத்தில் நடித்த கையோடு மீண்டும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் சரத்குமார் சாரும் நானும் இணைந்து நடிக்க ஆரம்பித்து விட்டோம். எப்போதுமே அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்ற நபராகவே தெரிவார். ஆனால் காட்சிகளில்நடிக்கும் போது என வந்துவிட்டால் என்னை விட அவர் பயங்கர பிட்டாக இருக்கிறார். நான் இந்த திரையுலகில் நுழைந்ததிலிருந்து எனக்கு ரொம்பவே  கிரஷ் ஆன ஒரு நடிகர் என்றால் அது ஆர்யா தான். இப்போது வரை ஸ்டைலிஷான, அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கக்  கூடிய நடிகராக அவர் இருக்கிறார். அவருடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷம். ஆனால் படப்பிடிப்பில் ஒரு பார்த்தபோது ஒரு ஹல்க் போல மிகப் பிரம்மாண்டமாக தோன்றினார். அந்த அளவிற்கு தனது உடலைக்  கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் அங்கே வெள்ளம் வந்தபோது கூட ஆர்யா தங்கி இருந்த இடத்தில் இருந்து வெளியேறி அங்கிருந்தவர்களிடம் ஜிம் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர் எனக்கு ஒரு ரோல் மாடல் தான். இயக்குநர் மனு ஆனந்த்தும் நானும் பல வருடங்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் என பேசிக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் இந்த கதாபாத்திரத்தில் என்னை அழைத்து நடிக்க வைத்துள்ளார். எனக்குள் இருந்த நடிப்புத் திறமையைக் அவர் சரியாகக் கணித்து வெளிக்கொண்டு வந்துள்ளார். நானும் அதைச் சரியாக செய்துள்ளேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

*நடிகை மஞ்சு வாரியர் பேசும்போது,* “மிஸ்டர் எக்ஸ் படத்தைப் பொறுத்தவரை எனக்கு இன்ட்ரஸ்டிங்கான படம். அந்தப் படம் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு புதுசு தான். இயக்குநர் மனு இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியை எடுக்கும் போதும் இந்த படத்தின் கதை என்ன என்று ஒவ்வொரு முறையும் விவரித்துக் கூறுவார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் நிறைய கடுமையான சவால்கள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்த படத்தை முடிக்க படக்குழுவினர் மிக பக்கபலமாக இருந்தார்கள். இந்த படத்தில் பணியாற்றும்போது எங்களுக்கு கிடைத்த உற்சாக அனுபவம் போல, படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் திரையரங்குகளில் அதே போன்று கிடைக்கும்” என்று கூறினார்.