அரசியல் விளையாட்டு வேண்டாம், ‘ஜனநாயகன் ‘ படத்தை வெளியிடுங்கள் – கே ராஜன்

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து  ‘ப்ராமிஸ்’ என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து என்.நாகராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கே.ராஜன் பேசியதாவது: தமிழ் சினிமாவில் பழிவாங்குவதற்கு என்றே சில காரியங்கள் நடக்கின்றன. ’ஜனநாயகன்’ படம். அதன் கதாநாயகன் பெரிய கதாநாயகன். அவர் சாதாரணமாக நடித்து இருந்தால் ,இந்தப் பிரச்சினை வந்திருக்காது அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து நான் தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்று அடம் பிடித்தார் அல்லவா? அதில் பிடித்தது பிரச்சினை. யாருமே எடுத்ததுமே நானே முதலமைச்சர் ஆவேன் என்று  சொன்ன வரலாறு கிடையாது. எடுத்தவுடனேயே நான் முதலமைச்சராகவேன் என்று யாரும் சொன்னதில்லை.அப்புறம் ஐம்பது அறுபது ஆண்டுகளாக கட்சி நடத்துபவர்கள் என்ன ஆவார்கள்? அதில் யாருக்கோ ஒருவருக்கு காழ்ப்புணர்ச்சி வந்துவிட்டது. கூட்டணிக்குக் கூப்பிட்டுப் பார்த்தார்கள். இல்லை, நான் தனியே தான் நிற்பேன் என்றார். தனியேதானே நாங்கள் ஜனநாயகனைப் பார்த்துக் கொள்கிறோம் என்று பிரச்சினை செய்கிறார்கள். யார் என்ன என்பதைப் பற்றி நான் சொல்லவில்லை. ஒரு படம் எடுத்து முடித்தாகி விட்டது. கதாநாயகனுக்கு மட்டும் 250 கோடி மீதி 100 கோடி ரூபாய் படம் எடுக்கும் செலவு  .இப்படி படம் முடிந்துவிட்டது. ஒரு தயாரிப்பாளர் செலவுகளைச் செய்துவிட்டார். இப்போது கஷ்டம் யாருக்கு?தயாரிப்பாளருக்குத்தான். பணம் போட்ட தயாரிப்பாளர் நிறுத்தப்படுகிறார். அதில் எந்த நியாயமும் இல்லை. இப்படிப் பழிவாங்குவதற்கு நியாயமே இல்லை . இது பழிவாங்குதல் ஒன்றுதான். இதில் பணம் போட்ட முதலாளி அவஸ்தைப்படுகிறார். நாளையே அவர் இந்தக் கட்சியுடன் கூட்டணி என்று சொல்லட்டும் நாளை சாயந்திரம் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு சர்டிபிகேட் போய்விடும் .இதெல்லாம் அரசியல் விளையாட்டுகள். இது தவறு. இதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் மற்றவர்களுக்கு கஷ்டம் வரும்போது விஜய் யாருக்கும் குரல் கொடுத்ததில்லை. அதனால் விஜய்க்கு  யாரும் குரல் கொடுக்கவில்லை. எல்லாரும் அவரைக் கைவிட்டு விட்டார்கள் . தயாரிப்பாளர் காப்பாற்றப்பட வேண்டும் இதைக் கண்டித்து மாநில அரசின் மீது குறை சொல்வதில் அர்த்தமே இல்லை. முதலமைச்சர் கூட இப்படி செய்யக்கூடாது என்று ட்விட்டரில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதற்கு மத்திய அரசுதான் காரணம்.******

எந்த அரசாங்கம் இருந்தாலும் ஜனநாயகனின் பிரச்சினையை முடித்து நீதிமன்றப் பிரச்சினையை முடித்து படத்தை வெளியிட்டு, தயாரிப்பாளர் காப்பாற்றப்பட வேண்டும் .அதான் என்னுடைய நோக்கம். அவர் அடுத்த படம் தயாரித்து ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைகொடுக்க வேண்டும். ’ஜனநாயகன் ’ படம் விரைவில் வரவேண்டும். உங்கள் அரசியலுக்காக சினிமாவைப் பழி வாங்காதீர்கள். சத்தியமாகச் சொல்கிறேன் இந்த ‘ப்ராமிஸ்’  படம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது, “எங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை,இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரங்களோ பிரமாதமான பட்ஜெட்டோ கிடையாது .எங்களைத் தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லை. அப்படி இருக்கும்போது இங்கே பேரரசு, கே ராஜன் போன்றவர்கள் தான் ஆதரவாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்குச் சினிமா மிகவும் பிடிக்கும்.நன்றாக இருந்தால் சினிமாவைக்  கொண்டாடுவார்கள். நன்றாக இல்லை என்றால்  விமர்சனமும் பலமாக செய்வார்கள். நான் ஊடகத்தில்  2015 – லிருந்து 21 வரை வேலை பார்த்தேன். பிறகு ஒரு பைலட் பிலிம் எடுத்தேன். நண்பர்கள் ஆதரவாக இருந்தனர். ‘வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்’ என்ற அந்த ஒரு மணி நேரப் படத்தை எடுத்து எங்கள் பகுதியில் எல்இடியில் திரையிட்டேன் .அதிலிருந்து நகர்ந்து  இந்தப் படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்து இந்த நிலைக்கு வந்து நிற்கிறேன். வாய்ப்பு கேட்டு எங்கே போனாலும் அனுபவம் வேண்டும், அனுபவம் வேண்டும் என்று கேட்டார்கள்.அந்த நிலையில் இவர் என்னை நம்பினார்.அதுமட்டுமல்ல இந்தப்படம் உருவாகும் போது என்னை ஒவ்வொரு கட்டத்திலும் கைப்பிடித்து அழைத்துச் சென்ற இந்தத் தயாரிப்பாளரை மறக்க முடியாது. இந்தப் படத்துக்கு உயிரோட்டமாக சரவண தீபனின் இசை இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாதிக்குத்தான் ட்ரெய்லர் வெளியிட்டுள்ளோம். சுவாரஸ்யம் போய்விடும் என்று இரண்டாம் பாதியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு அது தெரியும். இதை விளம்பரப்படுத்துவதற்கு ஹெச். வினோத் சாரின் உதவியைக் கேட்டோம் .உதவுவதாகச் சொன்னார். அவருக்கு நன்றி.ஆனால் அவரோ ’ஜனநாயகன் ’ பிரச்சினையில் இருக்கும் போது நாங்கள் எப்படிக் கேட்பது?அதனால் அவரை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் சேரன் சார், மற்றும் நட்டி சாருக்கு நன்றி. நாங்கள் அதிக ஆட்கள் இல்லாமல் 12 பேர் மட்டும் கொண்ட குழுவாக இருந்து பல வேலைகளையும் செய்தோம்.இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம். ஒரு கட்டத்தில் இந்தப் படம் நிறுத்தப்பட்டு விடுமோ என்கிற பயம் இருந்தது. அந்த கஷ்டமான காலத்தில் அப்போது கதாநாயகி நதியா கைகொடுத்து உதவினார் .அதை மறக்க முடியாது. இப்படிப் பலரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்