ஶ்ரீநிவாசரூ ஜலகாம் தயாரிப்பில், பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜூ ராசப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “எமகாதகி”. சிறுவயது முதலே ரூபா மூச்சித்திணறல் நோயால் அவதிப்படுகிறார். இந்நிலையில் ரூபாவின் அண்ணன் சுபாஷ் ராமசாமி ஊர் கோயிலிலுள்ள கிரீடத்தை திருடிவிடுகிறார். இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக இளம்பெண்ணாக இருக்கும் ரூபா தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் அதை வெளியே தெரியாமல் மறைக்க தந்தை ராஜூ ராசப்பனும் அம்மா கீதா கைலாசமும் மூச்சுத்திணறலால் மகள் இறந்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். இதை நம்பிய ஊர்காரர்கள் பிணத்தை எடுக்க முற்படும்போது அது முடியாமல் போய்விடுகிறது. பிணத்தை வெளியே எடுக்க முடியவில்லை. பிணமாக கிடக்கும் ரூபாவின் உடலை ஏன் வெளியே எடுக்க முடியவில்லை?. ரூபாவின் ஆன்மா எதைச் சொல்ல நினக்கிறது? என்பதுதான் கதை. ஒரு கிராமத்து கதையை பேய் படமாக தயாரித்து இருக்கிறார்கள். காட்சிக்கு காட்சி அதிர்ச்சியூட்டி படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். கதையின் நாயகி ரூபா கொடுவாயூருக்கு இது முதல் படம். ஆனால் பலபடங்களில் நடித்து அனுபவம் நிறைந்தவராக நடித்திருப்பது பாராட்டுதலுக்குறியது. நாயகனாக நடித்திருக்கும் நரேந்திர பிரசாத், நீரோட்டத்திற்கு தகுந்தபடி நாணல் வளைந்து கொடுப்பதைப்போல் நடித்து பாராட்டை பெறுகிறார். அண்ணனாக நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமி திரைவானில் மின்னுகின்ற நட்சத்திர நாயகனாக வரும் வாய்ப்புள்ளது. பெற்றோர்களாக நடித்திருக்கும் ராஜூராசப்பன் கீதா கைலாசத்தின் உணர்வுப்பூர்வமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். கதையின் ஓட்டத்தை தங்குதடையில்லாமல் இசையால் நகர்த்தி சென்றிருக்கிறார் ஜெசின் ஜார்ஜ். இயற்கையான இரவின் இருளை வெள்ளித்திரையில் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க். பேய் பட ரசிகர்களுக்கு போதுமான அம்சங்கள் நிறைந்த படம் “எமகாதகி”.
“எமகாதகி” திரைப்பட விமர்சனம்
