கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது கண்டிக்கதக்கது – வேல்முருகன்

ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று காவிரியில் மேக்த்தாட்டு அணை கட்டுவோம் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருக்கும் போது தெரிவித்திருந்தார். தற்போது அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும், மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆவணப்போக்குடன் அறிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை புறம்தள்ளி விட்டு கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது, 26.7.2021 அன்று மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங், கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்குரிய முன் ஒப்புதல்களை ஒன்றிய அரசு கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். மேலும், கர்நாட அரசின் விரிவான திட்ட அறிக்கையைச் செயல்படுத்தும் விதமாக, அதனை 20.01.2019 அன்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறக்கோரியிருப்பதாகவும் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் ஆதரவிற்கான இத்தகைய நிலைப்பாடு மோடிக்கும், அமித்ஷாவிற்கும் தெரியாமல் நடத்திருக்காது. மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து கையாண்டு வரும் தமிழின விரோதப் போக்கு, இந்த மேக்கேத்தாட்டு விவகாரத்திலும் அம்பலமாகியுள்ளது.  ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மேக்கேத்தாட்டிற்கு அணைக்கட்ட அனுமதி அளிக்கவில்லை. அதே போன்று, மேக்கேத்தாட்டு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், அணையை கட்ட நீராற்றல் துறை அவசர அவசரமாக அனுமதி கொடுக்கிறது என்றால், தமிழ்நாட்டு அரசையும், மக்களையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. குறிப்பாக, மேக்கேத்தாட்டில் அணை கட்டினால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நீரை, வழங்க முடியாத நிலை ஏற்படும். மழைக்காலங்களில் காவிரி வெள்ள நீரையும் அந்த அணையில் தேக்கி கொள்வார்கள்.  இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். 15 மாவட்டங்களில் பாசனம் செய்ய முடியாது. இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 18.06.2021 அன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, மேக்கேத்தாட்டிற்கு அனுமதி அளிக்க கூடாது என மனு அளித்திருந்தார். அவரை தொடர்ந்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அனைத்துக்கட்சி தலைவர்களுடன், 06.07.2021 அன்று கசேந்திர சிங் செகாவாத்தை சந்தித்து மனு அளித்திருந்தார். அதுமட்டுமின்றி, மேக்கேத்தாட்டு அணைத்திட்டத்தை தடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி, 05.12.2014, 27.03.2015 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதோடு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும், மேக்கேத்தாட்டு அணையை கட்டக்கூடாது என பல்வேறு  போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. முக்கியமாக ஐ.பி.எல் போராட்டம், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் இத்தனை போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் புறம் தள்ளி விட்டு, கர்நாடகத்திற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி கொடுக்கும் வழிமுறைகளை கையாண்டு வருவதாக கசேந்திர சிங் கூறியுள்ளார். கடந்த காலங்களில் ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய அணைகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதை போன்று, தற்போது மேக்கேத்தாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் முயன்று வருகிறது.
எனவே, மேக்கேத்தாட்டு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்க வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மேலும், இவ்விவகாரத்தை அரசியல் ரீதியாகவும் எதிர்க்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால், அனைத்துக்கட்சிகள் மற்றும் அரசியல் இயக்கங்கள், விவசாய அமைப்புகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.