“கூரன்” திரைப்பட விமர்சனம்

இயக்குநர் விக்கி தயாரிப்பில் நிதின் வேமுபதி இயக்கத்தில்  இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய். ஜி .மகேந்திரன், சரவண சுப்பையா , சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “கூரன்”. கொடைக்கானலில் ஜான்சி என்கிற நாய் தனது குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தன் கண்ணெதிரேயே ஒரு குடிகாரக் கும்பல் காரை விட்டு ஏற்றிக்கொன்று விட்டுப் பறந்து செல்கிறது. அந்தத் தாய் நாய்  குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது . தனக்கான நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது, அங்கே அது துரத்தியடிக்கப்படுகிறது. இருந்தாலும் அங்கேயே படுத்துக் கொள்கிறது. அதன் பிறகு   வழக்கறிஞர் எஸ். ஏ. சந்திரசேகர் வீட்டுக்குச் செல்கிறது. காவலாளி அங்கேயும் அதை விரட்டி அடிக்கவே, மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறது. அதைக் கவனித்த எஸ் .ஏ. சி அது ஏதோ சொல்ல விரும்புகிறது என்று  அதன் உணர்வுகளைக் கவனிக்கிறார் .அது வாயில்லா ஜீவன் என்றாலும் அது தனது கதையை அவர் உணரும்படிச் செய்கிறது. அதைத் தொடர்ந்து சென்று, குட்டியை இழந்த அதன் கோபத்தையும்,சோகத்தையும்  புரிந்து கொள்கிறார். தர்மராஜ் என்கிற புகழ் பெற்ற வழக்கறிஞராக இருக்கும் எஸ்.ஏ.சி , அந்த நாய்க்காக வாதாட வருகிறார். பல்லாண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடாமல் இருந்தவர், அந்த நாய்க்காக களத்தில் இறங்குகிறார். அதன் கண்ணீருக்கு நியாயம் கிடைக்கச் செய்வதாக அந்த நாயிடம் உறுதியளிக்கிறார். அதன் குட்டியை இரக்கமில்லாமல் கொன்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அந்த வழக்கை எடுத்துக் கொள்கிறார். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அதை நீதிமன்றத்தில்  நிரூபிப்பதற்கும் அவர் போராடுகிறார் .இறுதியில் வாயில்லா ஜீவனின் குரலுக்கு நீதி கிடைத்ததா? அதற்கு அவர் என்ன செய்கிறார்? என்கிற போராட்டத்தின் பயணம் தான் இந்த 110.27 நிமிடக் ‘கூரன்’ படத்தின் கதை. படத்தின் முதல் பாதி சற்றே மிதமான வேகத்தில் பயணிக்கிறது என்றாலும் இரண்டாம் பாதியில் அந்த வழக்கு நீதிமன்றத்தை அணுகும் போது கதையில் சூடு பிடிக்கிறது. அதன்பிறகு பரபரவென  படம் நகர்ந்து முடிவை எட்டுகிறது. கூரன் படத்தில் வழக்கறிஞர் தர்மராஜ் என்கிற பாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார்.நடிகராக அவர் தோன்றிய படங்களில் இதைக் குறிப்பிடத்தக்க பாத்திரம் என்று கூறலாம்.அவரது மிடுக்கான தோற்றம், பொருத்தமான உடல் மொழி, வசன உச்சரிப்பு, மிகையற்ற பாவனைகள்  அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டுகின்றன. ஒரு நடிகராக இனி அவர் இது மாதிரி தேர்ந்தெடுத்த பாத்திரங்களில் நடிக்கலாம். நீதிமன்றக் காட்சிகளில் வாதப் பிரதிவாதங்கள் , தண்டனைச் சட்டங்கள் ,சட்ட உட்பிரிவுகளைப் பற்றி எல்லாம்  காட்சிகள் வரும் போது எஸ்.ஏ. சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை,நீதிக்கு தண்டனை போன்ற பழைய படங்களின் நீதிமன்றக் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அதே பரபரப்பான எஸ். ஏ . சந்திரசேகரை மீண்டும் பார்ப்பது போல் உள்ளது. ‘கூரன்’ நல்ல கருத்தைச் சொன்ன தரமான படம் எனலாம்.இன்றைய சூழலில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் வந்திருக்கும் அரிதான படம் என்று கூடக் கூறலாம்.