
விஷ்ணு விஷால் ஸ்டுடியோ தயாரிப்பில் கே.பர்வீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷர்த்தா ஶ்ரீநாத், மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஆரியன்”. ஒரு தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றும் ஷர்த்தா ஶ்ரீநாத் பார்வையாளர்கள் புடைசூழ ஒரு அரசியல் நிகழ்ச்சியைப்பற்றி தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது பார்வையாளகளின் வரிசையிலிருந்து திடீரென்று எழுந்து கையில் துப்பாகியுடன் நிகழ்ச்சிக் கூடத்தின் நடுவில் வந்த செல்வராகவன் “ஐந்து நாட்களில் ஒவ்வொருவராக ஐந்து நபர்களை கொலை செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு பார்வையாளர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கதிகளாக பிடித்து வைத்துக் கொள்கிறார். அவரிடமிருந்து பிணைக் கைதிகளாக இருக்கும் பார்வையாளர்களை பத்திரமாக மீட்ட காவல்த்துறை, செல்வராகவனை கைது செய்யாமல் அந்த ஐந்து நபர்களை காப்பாற்ற காவல்த்துறை அதிகாரியாக இருக்கும் விஷ்ணு விஷால் தலைமையில் ஒரு குழுவை அமைக்கிறார்கள். செல்வராகவன் யார்? அவரை ஏன் கைது செய்யவில்லை? கொலை செய்யப்படுவதாக சொன்ன அந்த ஐந்து நபர்கள் யார்? அவர்களை விஷ்ணு விஷால் காப்பாற்றினாரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு யாரும் எதிர்பாராத வகையில் ஒரு புதுமையான முயற்சியில் அடுத்தடுத்து அதிர்வூட்டும் வகையில் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பர்வீன் பதிலளித்திருக்கிறார். காவல் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வரும் விஷ்ணு விஷால், கொலை வழக்கை விசாரிக்கும் தோணியில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். மானாசா உடனான காதல், திருமணம், விவாகரத்து என்று அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் பாதிப்புகளை ஒரு பாடலின் மூலம் வெளிக்காட்டினாலும், அதை தனது அழுத்தமான நடிப்பு மூலமாகவும், உடல் மொழி மூலமாகவும் அனாசியமாக ரசிகர்களிடத்தில் கடத்தி அசத்தியிருக்கிறார். கொலைகளை தடுப்பதற்கான முயற்சியில், அவர் சேகரிக்கும் தகவல்கள், அதனை வைத்து நடத்தும் விசாரணை என்று படத்தின் விறுவிறுப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இறுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் செல்வராகவன், சைக்கோ கொலையாளியாக பயமுறுத்தவில்லை என்றாலும், அடுத்து யாரை கொலை செய்யப் போகிறார் ? என்ற கேள்வியை படம் முழுவதும் ஏற்படுத்தி பார்வையாளர்களை பதற்றத்துடனே வைத்திருக்கிறார். அலட்டல் இல்லாத அவரது நடிப்பு, இயல்பான உடல் மொழி ஆகியவை, அவர் செய்யும் அனைத்து விசயங்களையும் நம்ப வைத்துவிடுகிறது. தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரானின் இசை படத்துக்கு மிகவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. “ஆரியன்”, விஷ்ணு விஷாலை உச்சானிக் கொம்புக்கு கொண்டு சென்றிருக்கிறது.

