“கருப்பு பல்சர்” திரைப்படம் விமர்சனம்

யாசோ என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் முரளி கிரிஷ் எஸ். இயக்கத்தில் அட்டைக்கத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுநிஹா, மன்சூர் அலிஹான், சரவணா சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கருப்பு பல்சர்”. மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் வில்லன் ஆர்ஜைக்கு அடிக்கடி ஒரு பல்சர் விபத்தாகி  ஜல்லிக்கட்டு காளை மோதும் கனவு வந்து துன்புறுத்துகிறது. அதைத் தொடர்ந்து அவர் வசமிருக்கும் கருப்பு நிற பல்சரை தன்னிடம் பைனான்ஸ் வாங்கும்  தண்ணீர் கேன் வியாபாரி மன்சூர் அலிகானிடம் கொண்டுபோகச் சொல்கிறார்.  அந்த பல்சர் யார் கைக்கு கிடைத்தாலும் அதில் ஆணும், பெண்ணும் ஜோடியாக சென்றால் விபத்துக்கு உள்ளாகிறார்கள். இப்படியிருக்க, குடிநீர் வடிகட்டும் குழுமத்தில் வேலை செய்யும் தினேஷை தன் தொழில் எதிரியாகக் கருதும் மன்சூர், அவரைக் கொல்ல திட்டமிடுகிறார்.  இந்நிலையில் தினேஷைக் காதலிக்கும் ரேஷ்மா, கருப்பு பல்சரில் தன்னை அழைத்துச் செல்லக் கேட்க, அதற்காக மன்சூரிடம் இருக்கும் பல்சரை வாங்குகிறார் தினேஷ்.அதில் சென்றால் அவர் விபத்துக்குள்ளாகி இறந்து விடுவார் என்று கருதும் மன்சூர்,  அதை அவரிடம் சந்தோஷத்துடன் கொடுக்கிறார். பல்சர் மோட்டார் சைக்கிளில் சென்ற தினேஷ் தப்பித்தாரா?, ஆர்ஜை கனவில் வந்த காளைக்கும், மோட்டார் சைக்கிளுக்கும் என்ன.சம்பந்தம்? என்பதெல்லாம் மீதிக் கதை. தன் வயதுக்கும் இளமைக்கும் மீறிய வேடங்களை பிற படங்களில் ஏற்று வரும் தினேஷுக்கு இதில் இளமையான வேடம். அவரும் தனது வழக்கப்படியே இயல்பாகச் செய்திருக்கிறார். அத்துடன் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரராகவும் வந்திருப்பது அவருக்கு சிறப்பு.  ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா இரண்டு நாயகிகளில் பாத்திரப் படைப்பில் மதுனிகா  கொஞ்சம் தூக்கலாகத் தெரிகிறார். மன்சூர் அலிகான் வரும் காட்சிகளில் எல்லாம் அசைவ உணவை வெட்டிக் கொண்டிருக்கிறார். கதை முடிச்சை அவிழ்க்க சரவண சுப்பையா உதவி இருக்கிறார். ராகுலை அங்கங்கே ரசிக்க முடிகிறது. பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு வரவு செலவுக்கு நியாயம் சேர்த்திருக்கிறது.இசையமைப்பாளர் இன்பாவே பாடல்களையும் எழுதி அடையாளம் தெரிகிறார். கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் முரளி கிரிஷ். எஸ் ஒரு வணிக கதைக்குள் பேய், எதிர்பாராத திருப்பம், சமூக நீதி எல்லாம் கலந்து ஒரு கதை சொல்லி இருப்பதை பாராட்டலாம்.