ஜீ ஸ்டுடியோ, பேர்ளல் யுனிவர்ஸ் தயாரிப்பில் கமல்பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், குமரவேல், சாபுமோன் அப்துசமாத், ஆண்டனி, பிரவீன், பயர் கார்த்திக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கிங்ஸ்டன்”. தூத்துக்குடி மாவட்டதிலுள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் மீனவனாக வாழ்கிறார் ஜி.வி.பிரகாஷ். சொந்த படகு வாங்க வேண்டும் என்ற ஆசையில் ரவுடியாக இருக்கும் சாபுமோன் அப்துசமாத்திடம் வேலைக்கு சேர்கிறார். அவர் கடல் வழியாக போதைப் பொருள் கடத்துவது தெரிந்ததும் அந்த வேலையிலிருந்து விலகுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் பிணமாக கரை ஒதுங்கியதால், மீனபிடிக்க யாரும் கடலுக்கு செல்லக்கூடாதென அரசாங்கம் தடைவித்திருக்கிறது. இந்த தடையையும் மீறி ஜி.வி.பிரகாஷ் தனது நண்பர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார். அவர் உயிருடன் கரைவந்து சேர்ந்தாரா? இல்லையா?. ஏன் மீன்பிடிக்க சென்றவர்கள் பிணமாக கரை ஒதுங்கினார்கள் என்பதை சொல்வதுதான் மீதிக்கதை. பேய் படங்களில் இப்படத்தை ஒரு வித்தியாசமான பேய் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் கமல்பிரகாஷ். கடலுக்கடியில் கிடக்கும் தங்கப்புதையலை மையமாக வைத்து, ஆரம்பமும் முடிவும் தெரியாமல் பின்னி பிணைந்திருக்கும் தூக்கனாங்குருவி கூடுபோல கதையை பின்னி பிசைந்திருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு வஞ்சகமில்லாமல் உழைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவரின் உடை, நடை, பாவனை, தூத்துக்குடியின் தமிழ் உச்சரிப்பு எல்லாமே கல்ந்த உருவமாக தோற்றமளித்து தன்னை வருத்திக்கொண்டு நடித்திருப்பது பாராட்டத்தக்கது. திவ்யபாரதிக்கு கனமான கதாபாத்திரம் இல்லையென்றாலும் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பயணித்து கொடுத்த வேலையை நிறைவுடன் செய்து முடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷின் நண்பர்களாக நடித்துள்ள அனைவரும் இயக்குநருக்கும் தயாரிப்பாளர்ர்க்கும் தோள் கொடுத்து உதவியுள்ளார்கள். குறிப்பாக சேத்தன், அழகம்பெருமாள், குமரவேல், சாபுமோன் ஆகியோர் மிரட்டலான நடிப்பை தந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ பாடலில் கோட்டைவிட்டாலும் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் கடுமையாக உழைத்திருப்பது திரையில் நன்கு தெரிகிறது. மொத்தத்தில் கடலுக்குள் இழுத்துச் சென்ற தயாரிப்பாளரை இயக்குநர் கமல்பிரகாஷ் கரை சேர்ப்பது ஜி.வி.பிரகாஷின் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.
“கிங்ஸ்டன்” திரைப்பட விமர்சனம்
