ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவீன இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மௌனத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ள “காந்தி டாக்ஸ்”, வசனங்கள் ஏதுமின்றி, மௌனமே கதையை சொல்லும், மிக வலுவான ஒரு துணிச்சலான படைப்பாக உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு ஒன்றிணைந்துள்ளது. இவர்கள் அனைவரும் உரையாடல்களில்லாமல், முழுமையாக நடிப்பும் வெளிப்பாடும் மட்டுமே சார்ந்த கதையாடலை ஏற்றுக்கொண்டுள்ளனர்.*******
சினிமா பெரும்பாலும் பிரமாண்டம் மற்றும் ஒலியால் உருவாக்கப்படும் இக்காலகட்டத்தில், “காந்தி டாக்ஸ்” அதிலிருந்து மாறுபட்டு, உணர்ச்சி மற்றும் அமைதியைத் தனது மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் படம், தனது கருத்தை வெளிப்படுத்த சத்தமின்றி, உணர்வோடு, நிசப்தமாக பேசுகிறது.
விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி போன்ற நடிகர்களுக்கு, ஒரு மௌன திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது, கலைநேர்மையையும் நடிப்பின் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. வழக்கத்திற்கு மாறான, சவாலான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து தேர்ந்தெடுப்பதற்காக அறியப்படும் இவர்களின் பங்கேற்பு, இந்த படத்தின் கலைத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ், உரையாடல் இல்லாத நிலையிலும், மிக நுணுக்கமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிப்பின் மூலம், கதைக்கு மேலும் ஆழம் சேர்த்துள்ளார்கள். இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, பின்னணியில் உழைத்திருப்பது A.R. ரஹ்மான் அவர்களின் இசை. காந்தி டாக்ஸ் படத்தில், பேசப்படாத வார்த்தைகளுக்குப் பதிலாக, ரஹ்மான் அவர்களின் இசையே உணர்ச்சிகளின் குரலாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாத இந்த உலகில், அவரது பின்னணி இசைதான் கதையாசிரியராக மாறி, பார்வையாளர்களை உணர்ச்சிப் பயணத்திற்குள் அழைத்துச் செல்கிறது. இந்த இசை, மௌனத்தை ஒரு வலுவான, ஆழமான அனுபவமாக மாற்றி, திரைப்படத்தை சர்வதேச தரம் கொண்ட, திரைப்பட விழாக்களுக்கு ஏற்ற படைப்பாக உயர்த்துகிறது.
திரைப்படத்தினைப் பற்றி இயக்குநர் கிஷோர் பெலேகர் கூறியதாவது: “காந்தி டாக்ஸ்” என்பது மௌனத்தின் மீது வைத்த நம்பிக்கை. இந்திய சினிமா நூற்றாண்டை கடந்த இந்த வேளையில், அதன் அடிப்படை வடிவமான தூய நடிப்பும் உணர்ச்சியும் கொண்ட கதை சொல்லலுக்குத் திரும்ப விரும்பினோம். நடிகர்கள் அந்த வெளிப்படைத் தன்மையை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். A.R. ரஹ்மான் அவர்களின் இசையே இந்த படத்தின் குரலாக மாறியது. Zee Studios மற்றும் மீரா சோப்ராவின் ஆதரவுடன், நாங்கள் ஒரு துணிச்சலான, நேர்மையான சினிமாவை உருவாக்க முடிந்தது.”“காந்தி டாக்ஸ்” மூலம், சினிமாவின் மரபுகளை சவாலுக்கு உட்படுத்தும், புதிய கதை மொழிகளை உருவாக்கும், மதிப்புமிக்க படைப்புகளை ஆதரிக்கும் தனது உறுதியை Zee Studios மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 30 ஜனவரி 2026 அன்று வெளியாகும் “காந்தி டாக்ஸ்”, ஒரு வார்த்தையும் பேசாமல், உணர்வுகளுடன் பேசும் ஒரு அபூர்வமான சினிமா அனுபவமாக இருக்கும்.

