“அருவா சண்ட” படத்திற்காக வைரமுத்து வரிகளில் ரம்யாநம்பீசன் பாடிய பாடல்

தமிழ் திரையுலகில் முதல் முழுமையான டிஜிட்டல் திரைப்படமான “சிலந்தி”, ரணதந்த்ரா (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் “அருவா சண்ட”. கபடி சண்டையையும் காதல் சண்டையையும் கௌரவக் கொலையையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ராஜா, மாளவிகா மேனன் நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன் ஆடுகளம் நரேன் கஞ்சாகருப்பு இயக்குனர் மாரிமுத்து காதல் சுகுமார் வெங்கடேஷ் சுஜாதா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். சரண்யா பொன்வண்ணன் இதுவரை ஏற்காத மாறுபட்ட வேடத்தில் மிரட்டியிருக்கிறார். கபடி போட்டிகள் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “சிட்டு சிட்டு குருவி ,வாலாட்டுதே… தொட்டு தொட்டு இழுத்து தாலாட்டுதே…”என்ற இளமை துள்ளும் பாடலை பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கொஞ்சும் குரலில் பாடியிருக்கிறார்.அவருடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார்.” பை பை பை…கலாச்சி பை… பாடல் அளவுக்கு நான் பாடிய இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பாடல் பதிவின்போது நம்பிக்கையுடன் கூறினார் ரம்யா நம்பீசன். இந்த பாடலுக்கு ராதிகா நடனம் அமைத்திருக்கிறார். கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் டிரெண்ட் மியூசிக் யூடியூப் சேனலில் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சுமார் 50 நாட்களாக இந்திய திரையுலகமே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில்… திரைப்படங்களின் போஸ்ட் புரடக்ஷன் பணிகளை தொடங்குவதற்கு தமிழ்த் திரைப்படத் துறையினர் அமைச்சரை சந்தித்து அனுமதி கேட்டு வந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முடக்கத்தையும் தயக்கத்தையும் கொரோனா அச்சத்தையும் உடைக்கும் முதல் நிகழ்ச்சியாக “அருவா சண்ட” படத்தின் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.படத்தொகுப்பை வி.ஜே.சாபு ஜோசப் கையாண்டிருக்கிறார். சண்டைக்காட்சிகளை தளபதி தினேஷ் அமைத்திருக்கிறார். சுரேஷ் கல்லேரி கலை அமைத்திருக்கிறார். நடனக் காட்சிகளை தீனா மற்றும் ராதிகா அமைத்துள்ளனர். ஒயிட் ஸ்க்ரீன் புரொடக்சன் சார்பில் வி. ராஜா பிரமாண்டமாக தயாரித்திருக்கும் “அருவா சண்ட” தணிக்கை செய்யப்பட்டு அனைவரும் பார்க்கும் வகையில் யூ சான்றிதழ் பெறப்பட் டிருக்கிறது. தணிக்கை அதிகாரியின் பாராட்டுக்களை பெற்ற இந்த படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.