இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திருச்சி, ஜூன் 26, 2020. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளையும், 58 பல மாநில கூட்டுறவு வங்கிகளையும் கொண்டு வருவ தற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமையன்று ஒப்புதல் அளித்தது. இந்த கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடி டெபாசிட்தாரர்கள் உள்ளனர். மொத்த
சேமிப்பு தொகை 4.85 லட்சம் கோடி ரூபாய். இந்த வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் டெபாசிட்தாரர்களின் பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும். அவசர சட்டம் குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில், 128 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும். கிராமப்புற வங்கிகள், விவசாய கூட்டுறவு வங்கிகள், இப்போதைக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படாது. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐ மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவதற்கு வரவேற்பு உள்ளது. கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள் தாங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது குறித்து   மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கூட்டுறவு வங்கிகள் ஆர்பிஐ மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளர், இரு அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்ற வர்த்தக வங்கிகளைப் போலவே கூட்டுறவு வங்கிகளிலிருந்தும் ஆர்பிஐ ஸ்டாட்யூட்டரி லிக்விடிடி ரேஷியோ, (SLR) காஷ் ரிசெர்வ் ரேஷியோ (CRR) சொத்துக்களை வகுப்புவாரியாகப் பிரிப்பது ஆகியவை குறித்த அறிக்கைகளைப் பெறும். நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள் தங்களுக்கும் மாறுதல்கள் பணியிட மாறுதல்கள் வரலாம் என்றும், மத்திய அரசு ஊழியர்களைப் போல, தாங்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

திருச்சியைச் சேர்ந்த இல்லத்தரசியான திருமதி.பிரியா, இவ்வாறு கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐ-யின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டு வருவதால் நிதிநிலை ஒழுங்கு நிலவும் என்று கூறினார். நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர் என்று அவர் கூறினார். பகுதி நகர்ப்புறமாக உள்ள செமி அர்பன் பகுதிகளில் வங்கிச் சேவை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் தான் ஒரே ஆதரவு. இந்த வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை இந்த வங்கிகளில் வைத்துள்ளனர். அரசின் இந்த முடிவு, பணத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று அவர் கூறினார்.

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் எனப்படும் ஆரம்ப கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டப்படி கூட்டுறவு சங்கங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அந்தந்த மாநிலங்களின் மாநில கூட்டுறவு சங்க பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தன. இதுவரை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் மீது இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டு அதிகாரம் கொண்டிருந்தது. இந்த அவசர சட்டத்திற்கு பிறகு மேற்பார்வை அதிகாரம் ஆர்பிஐக்கு அளிக்கப்பட்டுள்ளது ஆர்பிஐ-இன் கட்டுப்பாட்டு அதிகாரங்களின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வங்கி வர்த்தகங்களை மேற்கொள்வதற்கான உரிமங்களை வழங்குவது; புதிய கிளைகளைத் திறப்பதற்கான உரிமங்களை வழங்குவது ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. பாங்கிங் ரெகுலேஷன் ஆக்ட் சட்டத்தின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் முறைப்படியான அறிக்கைகளை ஆர்பிஐ-க்கு சமர்ப்பித்து வருகின்றன ஆர்பிஐ- இன் மேற்பார்வையின் கீழ் வந்ததால் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மீது மேலும் நல்ல நம்பிக்கை ஏற்படும். இதனால் மேலும் அதிக அளவில் டெபாசிட்டுகள் கிடைக்கும். நாட்டிற்கு நல்ல வருங்காலம் உறுதியாகும்.