ஏடுகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பளிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்றால் நாம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளோம். நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகின்றது. மரணத்தின் எண்ணிக்கையும் தடுக்க முடியாதபடி அதிகரித்து வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை காப்பாற்ற முடியவில்லை. மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொற்று நோய் தடுப்பு பணியில் முன் களப்பணி ஆற்றிவந்த மருத்துவர்கள், தலைமை செவிலியர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் என பலரை இழந்துள்ளோம். இது தவிர காவல்துறையினர், வருவாய்த்துறையினர், கல்வித்துறையினர் என அனைத்து தரப்பினரையும் நோய்த்தொற்று படாய் படுத்தி வருகின்றது. நோய்த்தொற்று பரவல் தீவிரமாகி தலைமைச் செயலகமே மூடப்படும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றிவரும் தலைமை அதிகாரி (டீன்) விடுப்பில் சென்றுள்ளார். இதற்கான காரணம் விளக்கப்படவில்லை. நோய்த்தொற்றால் மரணமடைவோர் எண்ணிக்கையை அரசு மூடி மறைத்து வருவதாக புகார் எழுந்தது. அதனை முதலமைச்சர் மறுத்தார். ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் மரணங்கள் பற்றிய தன்மை குறித்து விசாரிக்க குழு அமைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் துறைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப் பட்டார். 15.06.2020 அன்று வெளியான நாளேடு ஒன்று, கொரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்தோரின் எண்ணிக்கையில் 199 மரணங்கள் மறைக்கப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளது. தொடக்கம் முதலே எதிர்க்கட்சிகள், ஆளுங் கட்சியின் ஆதரவு கட்சிகள் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவரும் ஆலோசனைகள், வேண்டுகோள்கள் ஆளுங்கட்சியால் நிராகரிக்கப் படுகின்றன. முதன்மை எதிர்கட்சியான தி.மு.க. சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் முன்வைத்தபோது ஏளனம் செய்து கேலி செய்யப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் ஆய்வின் அடிப்படையில் முன் வைத்த ஆலோசனைகளும் அலட்சியப்படுத்தப்பட்டன. இந்த நிலை தொடரும் போது வரும் நாட்களில் நோய்த்தொற்று பரவல் பல மடங்கு அதிகரித்து, பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை கூறிவரும் மாநில அரசு, ‘தன்னை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டது.’ முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறிவரும் அரசு மக்கள் பிரச்சனைகளை காண மறுத்து கண்களை இறுக மூடிக்கொண்டது. கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவி செய்ய வேண்டிய அரசு அவர்களை கை கழுவி விட்டு சட்ட அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி அபராத வசூலில் ஈடுபட்டு வருகின்றது. அனைத்து தரப்பினரின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அலட்சியப்படுத்தி வரும் அரசு, நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைத்து வருகிறது. நீதித் துறையின் ஆலோசனைகளை மதிக்காமல் மேல் முறையீடு செய்து மதுக்கடைகளைத் திறந்து வைத்துள்ளது. சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று முக்கியமான தூண்களையும் தகர்த்து வரும் தமிழ்நாடு அரசு ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கி வரும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் முன்வைக்கப்படும் ஆலோசனை களையாவது ஏற்க முன்வரவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தனது அறிககையில் தெரிவித்துள்ளார்