ஒடிசா மாநிலம் பாரதீப்பில், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தை திரு.தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்;

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், ஒடிசா முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக்குடன் இணைந்து, பாரதீப்பில் இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ள தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தைக் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையம், இந்தியன் ஆயில் நிறுவனத்தால், பாரதீப்பில் உள்ள அந்நிறுவனத்தின் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ ரசாயண வளாகத்திற்கு அருகே, ரூ.43 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தில், பாலிமர் பதப்படுத்துதல் ஆய்வகம், பகுப்பாய்வு சோதனை ஆய்வகம், ரசாயனப் பகுப்பாய்வு ஆய்வகம் மற்றும் இயல்பாய்வு ஆய்வகம் ஆகிய 4 ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தொழில்நுட்ப மையத்தில், வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான 50 அதிநவீன பாலிமர் சோதனை மற்றும் பதப்படுத்தும் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன், பாரதீப், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையம், மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்குட்பட்ட அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையால், ஒரு ஆராய்ச்சி மையமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையம், ஒடிசா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில், பிளாஸ்டிக் துறையில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் மையமாகவும் திகழும். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், “கிழக்கு இந்தியா சார்ந்த தேச வளர்ச்சி என்ற பிரதமரின் பூர்வோதயா இயக்க சிந்தனைக்கேற்ப, மத்திய அரசம், ஒடிசா அரசும் இணைந்து, ஒடிசாவின் வளர்ச்சியை உறுதி செய்து வருவதாகக் கூறினார். பெட்ரோ ரசாயனம், எஃகு, தாதுக்கள் மற்றும் நிலக்கரி, அலுமினியம், சுற்றுலா, ஜவுளி, வேளாண் தொழில் முனைவோருக்கு, இம்மாநிலத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஒடிசாவில் வேலை வாய்ப்புகளைப் பெருமளவில் உருவாக்க ஏதுவாக, இம்மாநிலத்தின் பல்வேறு துறைகளிலும், தொழில் முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது”. “இன்று தொடங்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த இந்த மையம், பெட்ரோ ரசாயனத் தொழில் முனைவோருக்குத் தேவையான மூலப்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், திறமைவாய்ந்த, வளரும் முதலீட்டாளர் களுக்குத் தேவையான பயிற்சியையும் அளிக்கும். இந்த உயர்சிறப்பு மையம், ஒடிசா இளைஞர்கள், பெண்கள் மற்றும் கடுமையாக உழைக்கக் கூடியவர்களுக்கு, பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதோடு, மாநிலத்தின் வருவாய் மற்றும் பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். ஒடிசாவின் வளர்ச்சிக்கு இது மாபெரும் மைல்கல்லாக அமைவதுடன், சுயசார்பு ஒடிசாவை உருவாக்கவும் பங்களிப்பதோடு, ஒட்டுமொத்தமாக சுயசார்பு இந்தியா திட்டத்திற்கும் உரிய பங்களிப்பை வழங்குவதாகவும் அமையும்.“