புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக, புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி, கல்லூரிகளுக்கு இடையேயான முதலமைச்சர் கபடி போட்டியை சமீபத்தில் நடத்தியது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் என 20க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. பரிசு வழங்கும் விழா புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் லலிதா ராமகிருஷ்ணன், பிரமுகர்களையும் மாணவர் கூட்டத்தினரையும் வரவேற்றார், விளையாட்டு நிகழ்வுகளின் அமைப்பாளர் டாக்டர் எஸ். ஜெகதீஸ்வரி, செயல்பாடுகள் குறித்து விளக்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பாணிதி பிரகாஷ் பாபு, கபடி போட்டியின் வெற்றியாளர்களுக்கும், அனைத்து விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.
காலாபட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம்.எல். கல்யாணசுந்தரம், லாஸ்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். வைத்தியநாதன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விளையாட்டு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கல்லூரியில் பல விளையாட்டு மற்றும் தடகள நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கபடி போட்டியில் மகளிர் பிரிவில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியும், ஆடவர் பிரிவில் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரியும் கோப்பையை வென்றன. இதற்கிடையே 2025-26 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கான www.pucc.edu.in என்ற இணையதளத்தை லாஸ்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.