ஒரு இயக்குனரின் வேண்டுகோள்…

2020 ம் ஆண்டு பிறக்கும் போது யாருமே இது போன்ற பேரிடர் நம்மை நெருங்க போகிறது என்று நினைத்து கூட பார்த்து இருக்க வாய்ப்பில்லை. புத்தாண்டு சபதங்களும், புது வருட திட்டங்களும் கனவுகளும் என்று அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்த வருடத்தை வரவேற்றோம். ஆனால் கணக்குகள் அனைத்தும் தலைகீழ் விகிதங்கள் என்ற நிலையில் உலகமே விக்கித்து நிற்கிறது. நோய் ஒரு பக்கம் என்றால் அதை விட மிக கொடிய பொருளாதார சிக்கல்கள்  சாமான்யர்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாக குலைத்து போட்டு விட்டன. 

செலவுகள் அப்படியே இருக்கின்றன, வருமானம் அன்றாட அடிப்படை செலவுக்கு கூட இல்லை யென்றால் என்ன நடக்கும்? குடும்ப தலைவிகள் என்னதான் செய்ய இயலும்!  வெளியில் செல்லுபடியாகாத தன்குமுறலை ஆண்கள் வீட்டில் காட்ட அதன் விளைவாக பல சிதறல்கள்.  நீங்கள் தினசரி செய்திகளை கவனம்  அளித்து படிப்ப வராக இருந்தால்  கடந்த இரண்டு மாதங்களாக குடும்ப  வன்முறைகள்,
தற்கொலைகள்  சண்டைகள் கொலைகள் அதிகம் இருப்பதை  உணருவீர்கள். சக மனிதரின்  துன்பங்கள் என்னை செயல் இழக்க செய்கின்றன. ஒவ்வொரு நாளும் இதற்கு தீர்வு எப்போது என்று யோசித்து மருகுகிறேன். நான் சார்ந்து இருக்கும் 
திரையுலகில் இருந்து ஒவ்வொரு நாளும்  நான் கேள்விப்படும் விஷயங்கள் என்னை அழுத்துகின்றன. என்னிடம் உதவி கேட்டு வரும் அழைப்புகள் என்னை தூங்க விடுவதில்லை. நான் சொல்லி படப்பிடிப்பில் பல நூறு சாப்பாடுகள், காப்பி, டீக்கள் 
சலிக்காமல் வாங்கி வந்தவர்கள் இன்று அடுத்த வேளை உணவுக்கு சிரமமாக இருக்கிறது என்று போனில் சொல்லும் போது எனக்குள் ஏற்படும் வலியின் விளைவே  இந்த பதிவு. 

சொல்லப்போனால் இன்று திரையுலகினர் சந்திக்கும் சிரமங்களும் சூழ்நிலைகளும் ஒரு தொடர் நாவலில் எழும் பல கதைகளாக எழுதப்பட வேண்டியவை.  தன் விதி இவ்வாறு  நிர்ணயிக்கப்படுவதை தவிர்க்க இயலாது தவிக்கும்  கதாபாத்திரங்களின் தவிப்பில் எழுதப்படும் நாவலாக அது அமையக்கூடும்.  வெளியில் இருந்து நோக்குபவர்களுக்கு இது வெறும்  ஸ்டுடியோவும் சினிமாவும் ஆக மட்டுமே தெரியலாம். நிதர்சனம் அதுவல்ல. ஒளிரும் திரைக்கு பின்னால் அந்த ஒளிக்கு காரணமான பல ஆயிரம் மின்மினிகளின் உழைப்பு இருக்கின்றது, ஒவ்வொரு துளியிலும்! அவர்கள் படும்பாடுகளை  நன்றாக அறிந்தவன் என்ற வகையில் 
விழித்திருந்தாலும் தூங்கினாலும்  சிந்தித்தாலும் பேசாமலிருந்தாலும் என்னால்  இதை எளிதாக கடந்து போக முடியாது. 

நியாபகத்தில் கொள்ளுங்கள். சினிமா என்பது மற்ற வேலைகளை போல் அல்ல. படப்பிடிப்பு இருந்தால்தான் அனைத்துமே,  இல்லையென்றால் ஒன்றுமே கிடையாது. ஒவ்வொரு படமும் முடியும்போது அத்துடன் அந்த படத்தில் வேலை செய்தவர்களு க்கும் வேலை முடிந்து விடும். வேலைதான் முடிந்து விடுகிறதே தவிர, செலவுகளும் அன்றாட பிரச்சனைகளும் முடிந்து விடுமா என்ன? அது தலைக்கு மேல் வைக்கப்பட்ட கத்தி போல் ஒவ்வொரு சினிமா  தொழிலாளனின் வாழ்விலும் தொடர்ந்து கொண்டு தான் வரும். கடந்த நான்கு மாதங்களாக  எந்த வேலையும்  நடக்க வில்லை. பலருக்கு 
ஏற்கனவே வரவேண்டிய  தொகையும் வரவில்லை. என்ன செய்வார்கள்? 

இந்த நேரத்தில் அவர்களுக்கு செய்யப்படும் உதவிகள் காலத்தால் மறையாத 
நினைவுகளாக அவர்களின்  உள்ளத்தில் நிலைத்து இருக்கும். இதை நிச்சயமாக சொல்ல முடியும். திக்கு தெரியாமல் பல காலம் அலைபவனுக்கு கை பிடித்து  வழி காட்டுவது போன்ற உதவி இது. சினிமாவின் வழியாக கோடிக்கணக்கில் சம்பாதித் தவர்கள் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பணம், பெயர், புகழ் அனைத்தும் ஒருசேர பெற்றவர்கள் ஏராளம். இந்த நேரத்தில் உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். வேண்டுகோளும்  விடுக்கிறேன். 

அதே போல் மற்றவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. சிறிது பின்னோக்கி நம் முன்னோர்களை பார்த்தோம் என்றால், அன்று ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் மட்டுமன்றி  உறவினர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவரும் இருப்பார்கள். மிக மிக குறைந்த வருமானமே உள்ள போதும் முகம் சுளிக்காமல்  அனைவருக்கும் உணவு, உடை, இடம் அளித்த  முன்னோர்களின் வரலாறு நம்முடையது என்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன். உங்களில் பலருக்கு  திரையுலக நண்பர்கள் இருப்பார்கள். திரையுலகில் பணியாற்றும் உறவினர்கள் இருக்கலாம். சிலர்  உங்களிடம் உதவி கேட்டு இருக்கலாம். பலர் தயக்கத்தினாலோ வெட்கம் கூச்சத்தினால் உங்களிடம் இது பற்றி பேசாமல் இருந்து இருக்கலாம். அவர்களை போனில்  அழைத்து பேசுங்கள். உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாமே. நினைத்து பாருங்கள்,

அடுத்த மூன்று வேளை உணவிற்கு என்ன செய்வது  என்ற நிலையில்  இருக்கும் ஒரு குடும்பத்தில் நீங்கள் வாங்கி கொடுக்கும் ஒருமாத மளிகை அளிக்கும் சந்தோஷத்தை, மலர்ச்சியை வார்த்தையில் சொல்லி விட இயலுமா!! வீட்டு  வாடகை கொடுக்க  முடியாமல் தவிக்கும் உள்ளங் களுக்கு நீங்கள் ஒரு மாத வாடகை உதவினால் அந்த குடும்பம் அந்த மாதம் முழுவதும் நிம்மதியாக தூங்க  வாழ வழி செய்கிறீர்களே!! இந்த பேரிடர் காலத்தில் நீங்கள் செய்யும் குறைந்த பட்ச உதவிகள் கூட பெரிய அளவில் அவர்களின் வாழ்வில் நிம்மதியை, அமைதியை ஏற்படுத்த கூடும் என்பதை  நினைவில் வையுங்கள். இறுதியாக ஒன்று, இக்கட்டான  நிலையில் செய்யப்படும் உதவி தெய்வங்களால் நினைக்கப்படும்.  நன்றி. கே எஸ் தங்கசாமி  இயக்குனர் தயாரிப்பாளர் ராட்டினம் \ எட்டுத்திக்கும் மதயானை.