காவல்துறை நண்பர்கள் முறையை ரத்து செய்க…. அடுத்த ஜூன் மாதம் வரை விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் – இரா.முத்தரசன்

சமூகத்தில் நிகழும் குற்றங்களை தடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் அவர்களது குற்றச் செயல்களை நிருபித்து, தண்டனை கிடைக்கச் செய்வது, பொதுவான சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை பராமரித்து வருவது போன்ற மிக முக்கியமான கடைமைப் பொறுப்புகளை ஏற்றிருப்பது காவல்துறை நிர்வாகம். ஆனால் “வேலியே பயிரை மேய்வது ‘ காவல்துறையில் சிலர் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதை பல சம்பவங்கள் கவனப்படுத்தியுள்ளன. இதன் மீது அரசும், உள்துறை நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் காலத்தில் தலையிட்டு கறாரான வரைமுறைகள், ஒழுங்கு நெறிமுறைகளை உருவாக்க தவறியதன் மோசமான விளைவுகளை சாத்தான்குளம்’ காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் ‘இரட்டை படுகொலையாக‘ வெளிப்படுத்தியுள்ளது. இந்த கொடுங் குற்றச் செயலுக்கு காவல்துறையினர் ‘காவல்துறை நண்பர்கள்’ என்ற பெயரில் இருந்தவர்களை ‘அடியாட்களாக‘ பயன்படுத்தி இருப்பதும் தெரிய வருகிறது. இந்த ‘காவல்துறை நண்பர்கள்‘ என்ற முறையை அறிமுகப்படுத்தும் காலத்திலேயே இது ‘தவறுக்கு’ வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டது. அதிகாரத்தில் இருந்தோர் கருத்தில் கொள்ளவில்லை. எந்தவித விதிமுறைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘காவல்துறை நண்பர்கள்‘ அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர், சமூக ஆதிக்கம் செலுத்தும் தீய எண்ணம் கொண்டோர், காவல்துறைக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கும் இடையில் ‘தரகு வேலைகள்’ பார்க்கும் ‘திறமை’ பெற்றோர் போன்றோர் ஊடுருவி இடம் பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது. இதனை அதிகார வர்க்கமும், ஆளும் தரப்பும் அலட்சியப்படுத்தி விட்டன. இதன் காரணமாக ‘காவல்துறை நண்பர்கள்‘ சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையிலும் ‘காவல்துறை நண்பர்கள் ‘அமைப்பை இரண்டு மாதங்கள் மட்டுமே தடை செய்ய பரிசீலிப்பதாக செய்திகள் வருவதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. காவல்துறையின் அத்துமீறல்களை தடுக்க காவல்துறை நண்பர்கள் அமைப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தில் செயல்பட்டோர் மீதுள்ள புகார்கள் மீது விரிவாக விசாரணை நடத்தி, குற்றம் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு விலையில்லா உணவுப் பொருள்களை அடுத்த ஆண்டு ஜூன் வரையிலும் வழங்குக வேண்டும் என்றும் இரா.முத்தரசன் கூறினார்.

கரோனா நோய் பெருந்தொற்று காரணமாக மார்ச் 24 முதல் மத்திய அரசால் நாடு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் தொற்று நோய்கள் சட்டம் ஆகியவற்றை தீவிரமாக அமலாக்கி வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது.
வரலாறு காணாத வேலையின்மை அதிகரித்து வந்த நேரத்தில்,கொரானா நோய் தொற்று சேர்ந்து கொண்டதால் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என அளைத்துப் பிரிவுகளின் இயக்கங்களும் தடைபட்டுள்ளன. நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் ஆகியவற்றில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , மக்கள் வாழ்க்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த நிலையில் கொரானா நோய் தொற்று அதி வேகமாக பரவி வருவதால் நிலவரம் மோசமாகி வருகின்றது. இந்த நெருக்கடியான காலத்தை சமாளிக்க குடும்ப அட்டை பெற்றிருப் போர் அனைவருக்கும் வருகிற நவம்பர் மாதம் வரை பொது விநியோகத் துறை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் உணவுப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஜூலை மாதம் மட்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என6 அறிவித்துள்ளார். இதில் குடும்ப அட்டை. இல்லாதோர் குறித்தும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் கவலைகள் குறித்தும் கருத்தில் கொள்ளவில்லை. முன்னர் “மூன்று நாளில் கொரானா பிரச்சனைக்கு தீர்வு” வரும் என அறிவித்தது போல், இந்த மாத இறுதியில் கொரானா நெருக்கடி முடிந்து விடும் என நம்புகிறாரா? மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி கொரானா நோய் பெருந்தொற்று பல மாதங்கள் நீடிக்கும் என தெரிகிறது. இந்த நிலவரத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை அடிப்படையில் தாற்காலிக குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. என்று தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேட்டுள்ளார்.